சுடச்சுட

  

  ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 15th August 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pmmodi

  ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

  நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

  அதில், மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர். 

  இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது, ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை. சுயமரியாதையுடன் கூடிய முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன. கடந்த 70 ஆண்டுகளாக 370-ஆவது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை. 370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன. 

  கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை. 370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன்? என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னும் பல புதிய முயற்சிகளை எடுக்கிறது, மத்திய அரசு. ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற குறளை எடுத்துக் கூறி தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தினார். பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது. 

  நீர் பிரச்னை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம,  தண்ணீரின் அவசியம் - இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள். ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. தேவையற்ற சட்டங்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 1450 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள். 

  கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்க உறுதிமொழி எடுப்போம். டிஜிட்டல் பரிவர்த்தைனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலை 2 ட்ரில்லியன் டாலராக இருந்தது, கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார நிலை 5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போனால் அது பிரச்னையாக முடியும். 

  அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டினரும் கல்வி கற்க இந்தியா வருமளவுக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா துறையில் குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அமைதியை நிலைநாட்ட இந்தியா மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத செயல்களை இந்தியா கண்டித்தது. நாட்டை பாதுகாப்பதில் பாதுகாப்புப்படையினர் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவாக நிற்கிறது. தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். பயங்கவரவாதத்தை ஆதரித்து வரும் அண்டை நாட்டின் முகத்திரையை கிழித்து வருகிறது இந்தியா. 

  கடந்த 1998 முதல் 2003 வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து 6 முறை சுதந்திர தின உரையாற்றினார். இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai