சுடச்சுட

  

  தென்கிழக்கு ஆசியாவில் துறவிகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தியா

  By DIN  |   Published on : 15th August 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAM-MADHIAV


  தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது தாக்கத்தை ராணுவத்தினரின் மூலம் ஏற்படுத்திய நிலையில், இந்தியா அப்பகுதியில் துறவிகள், வர்த்தகர்களைக் கொண்டு தடம் பதித்தது என்று பாஜக பொதுச் செயலரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ராம் மாதவ் கூறினார். 
  தில்லியில் புதன்கிழமை இந்தியா-தென்கிழக்கு ஆசியா; கலாசாரத் தொடர்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ராம் மாதவ் பேசியதாவது: 
  இந்தியா-தென்கிழக்கு ஆசியா இடையேயான உறவில் பெரும்பகுதி கலாசார மற்றும் மத ரீதியிலானதாகும். எனினும், நாடு சுதந்திரம் பெற்ற பின் இவற்றை ராஜீய ரீதியில் எவ்வாறு கையாள்வது என்பதில் மதச்சார்பற்ற கொள்கை காரணமாக தடுமாற்றம் ஏற்பட்டது. அதன்பின், கடந்த 1990-களில் கிழக்கை நோக்கிய கொள்கையை கொண்டுவந்து, அந்தப் பகுதியுடனான தொடர்பை ஏற்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பாராட்டப்பட வேண்டியவர். 
  தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்ததில் இந்தியா, சீனா மேற்கொண்ட முயற்சிகளிடையே பெரும் வித்தியாசம் இருந்தது. சீனாவைப் பொருத்த வரையில் முதலில் அந்நாட்டு ராணுவத்தினரே தென்கிழக்கு ஆசியாவில் தடம் பதித்தனர். அவர்களைத் தொடர்ந்து அந்நாட்டு வர்த்தகர்கள் அங்கு குடியேறினர். சீனா தனது ராணுவத்தின் மூலம் தடம் பதித்ததால், ராணுவம் சென்றடைய முடிந்த பகுதிகளில் மட்டும் அந்நாட்டின் தாக்கம் இருந்தது. 
  ஆனால் இந்தியாவிலிருந்து முதலில் துறவிகளும், மதகுருக்களுமே முதலில் தென்கிழக்கு ஆசியாவில் தடம் பதித்தனர். அவர்களைத் தொடர்ந்தே வர்த்தகர்கள், மாலுமிகள் ஆகியோர் அங்கு செல்லத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் மரம் நடும் தொழில், சுரங்கத் தொழில் போன்றவற்றுக்காக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். அந்த வகையில் மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் உள்ளனர். 
  ராஜீய ரீதியிலான தொடர்புகளில், கலாசாரம் என்பது இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கிய கருவியாகும். அதனாலேயே மோடி பிரதமரான பிறகு ராஜீய ரீதியிலான உறவுகளுக்குரிய முக்கிய காரணிகளில் ஒன்றாக கலாசாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று ராம் மாதவ் பேசினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai