370-ஆவது பிரிவு இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தியது: பிரதமர் நரேந்திர மோடி

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
370-ஆவது பிரிவு இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தியது: பிரதமர் நரேந்திர மோடி


அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற முதல் 75 நாள்களில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை மேற்கொண்டது. இந்த முடிவு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அவரிடம், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததை பலரும் ஆதரித்தாலும், சிலர் மட்டும் எதிர்ப்பது ஏன்? சிறப்பு அந்தஸ்து ரத்தை ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா? என்பவை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மோடி அளித்த பதில்:
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும். தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடுபவர்கள், குடும்ப அரசியல் செய்பவர்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவோர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில நண்பர்கள்- இவர்கள்தான் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை எதிர்த்தவர்கள்.
ஆனால், இந்த முடிவுக்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது; அரசியலுக்காக இல்லை. இது, கடினமான முடிவாக இருந்தாலும், அவசியமான முடிவு என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, 35ஏ பிரிவு ஆகியவை இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தி வந்தன. இந்த சட்டப் பிரிவுகளை மூலதனமாகப் பயன்படுத்தி சில குடும்பங்களும், சில பிரிவினைவாதக் குழுக்களும் ஆதாயம் அடைந்து வந்தன. அந்த சட்டப் பிரிவுகள், ஜம்மு-காஷ்மீரை எப்படி தனிமைப்படுத்தி வைத்திருந்தன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டார்கள். கடந்த 70 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால்தான், ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியவில்லை. அவர்கள், வளர்ச்சியின் பலனை அனுபவிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு முறையாக எந்தவொரு திட்டம் வகுக்கப்படாததால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஜம்மு-காஷ்மீரை பல ஆண்டுகளாக அச்சுறுத்தலே ஆட்சி செய்து வந்தது. தற்போது வளர்ச்சிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சகோதரர்களும், சகோதரிகளும் தங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பினார்கள். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை. அங்கு பெண்கள், சிறார்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டது. முக்கியமாக, ஜம்மு-காஷ்மீர் மக்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கப்படவேயில்லை. ஆனால், இப்போது, பிபிஓ பணி முதல் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குவது வரை, உணவு பதப்படுத்தும் துறை முதல் சுற்றுலா வரை பல்வேறு தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவும், 35ஏ பிரிவும், ஜம்மு-காஷ்மீர் மக்களை சங்கிலியால் விலங்கிட்டதுபோல் இருந்தன. தற்போது அந்த அடிமைச் சங்கலி தகர்க்கப்பட்டு விட்டது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் இலக்கினை முடிவு செய்வர். அவர்களின் கனவுகள், விருப்பம், குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அந்தப் பிராந்தியம் வளர்ச்சி பெறும் என்றார் பிரதமர் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com