73-ஆவது சுதந்திர தினம்: தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று உரை

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
73-ஆவது சுதந்திர தினம்: தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று உரை


நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி, சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைந்த பிறகு, அவர் முதல்முறையாக சுதந்திர தின உரையாற்றவிருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஆற்றவிருக்கும் சுதந்திர தின உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களைப் போலவே, பிரதமர் மோடியின் இப்போதைய உரையிலும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், அவரது சுதந்திர தின உரையின்போது அறிவிக்கப்பட்டவையாகும். மேலும், தனது அரசின் சாதனைகள் குறித்தும், நீர்ப் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1998 முதல் 2003 வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து 6 முறை சுதந்திர தின உரையாற்றினார். இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து 6-ஆவது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்தவுள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: ஜம்மு-காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தானுடன் நிலவி வரும் பதற்றமான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் கொடியேற்றவிருக்கும் செங்கோட்டை பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர், ராணுவம், துணை ராணுவத்தின் பல்வேறு படை பிரிவினருடன் தில்லி காவல்துறையினர் 20,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை பகுதியில் சுமார் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்களும், ஸ்வாட் கமாண்டோக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமானங்களை கண்டறியும் அமைப்பும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கண்டறிவதற்காக, முக அடையாள தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் பாராகிளைடிங், வெப்ப காற்று பலூன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com