தேசியக் கீதத்தில் நமக்குத் தெரியாத மிச்சப்பகுதி: அழகாய் பாடும் 88 வயது குடிமகள்!

ரபீந்திரநாத் தாகூர் எழுதிய நாட்டுப்பற்றை உணர்த்தும் ஒரு மிகப்பெரிய பாடலின் தொடக்க வரிகளைத்தான் இந்தியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொண்டு பாடி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தேசியக் கீதத்தில் நமக்குத் தெரியாத மிச்சப்பகுதி: அழகாய் பாடும் 88 வயது குடிமகள்!


மைசூரு: ரபீந்திரநாத் தாகூர் எழுதிய நாட்டுப்பற்றை உணர்த்தும் ஒரு மிகப்பெரிய பாடலின் தொடக்க வரிகளைத்தான் இந்தியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொண்டு பாடி வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், ரபீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய 5 பகுதிகளைக் கொண்ட பாடலின் ஒரு பகுதி தான் நமது தேசிய கீதம். இந்த தேசிய கீதத்தின் 5 பகுதிகளைக் கொண்ட முழு பாடலையும் மைசூருவைச் சேர்ந்த சரஸ்வதி படேக்கிலா தனது இனிமையான குரலில் பாடி அசத்துகிறார்.

தற்போது 88 வயதாகும் சரஸ்வதி மைசூருவில் வசித்து வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தனது மகன், மகள், பேரக் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து, அக்கம் பக்கத்தினரையும் அழைத்து, முழு பாடலையும் பாடி, சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், தான் 4ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது, தாகூர் எழுதிய முழு பாடலும் தனக்குக் கிடைத்ததாகவும், அது முதலே, ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும், முழு பாடலையும் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

அந்த முழு பாடலும் எனது கையில் கிடைத்த போது, முழு பாடலையும் பாட வேண்டியது எனது கடமை என்று நினைத்தேன். அந்த பாடலில், நமது நாடு சுதந்திரம் அடைய எவ்வளவு போராட்டங்களை சந்தித்தது என்பதை அழகாக தாகூர் எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல், இதர பல விஷயங்களையும் அந்த பாடல் கொண்டுள்ளது என்று விளக்கும் சரஸ்வதி, 5 பகுதிகளைக் கொண்ட பாடலில் நாம் வெறும் 52 விநாடிப் பாடலை மட்டுமே பாடுகிறோம் என்று தெரிவித்தார்.

ஏராளமான குழந்தைகளுக்கு நான் அந்த பாடலை காற்றுக் கொடுத்து வருகிறேன். யார் விரும்பினாலும், அவர்களுக்கும் முழு பாடலையும் கற்றுக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் சரஸ்வதி உற்சாகமாகக் கூறுகிறார்.

நான் மிகவும் துரதிருஷ்டசாலி என்கிறார் சரஸ்வதி. ஏன் என்று கேட்டதற்கு, ஒரு முறை காந்தி, மங்களூரு வந்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்போது என் மீது சுடுதண்ணீர் கொட்டி புண்ணாகியிருந்ததால், எனது தந்தை காந்தியை சந்திக்கச் சென்ற போது என்னை அழைத்துச் செல்லவில்லை. இல்லையென்றால் நான் மகாத்மா காந்தியை சந்தித்திருப்பேன் என்கிறார் வருத்தத்தோடு.

எனக்கு 18 வயது ஆகி குடியுரிமை பெற்ற பிறகு, ஒரு முறை கூட வாக்களிக்கத் தவறியதில்லை என்றும் பெருமிதத்தோடு கூறுகிறார் சரஸ்வதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com