சுற்றுலா செல்லுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் சுதந்திர தினச் செய்தி

தூய்மை இந்தியா போன்ற பாஜகவின் மிக முக்கிய கொள்கைகளை பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்திருந்தது ஞாபகம் இருக்கலாம்.
சுற்றுலா செல்லுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் சுதந்திர தினச் செய்தி


புது தில்லி: தூய்மை இந்தியா போன்ற பாஜகவின் மிக முக்கிய கொள்கைகளை பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்திருந்தது ஞாபகம் இருக்கலாம்.

அந்த வகையில் இன்று செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி.

அப்போது பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட மோடி, நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்.

அதாவது, நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றால் நாடு முழுவதும் இன்னும் 100 சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும்.

2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்காவது செல்ல வேண்டும். இந்தியா சுற்றுலாத் துறையில் வளர்ச்சி அடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியாவின் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்தால் அதன் மூலம் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி அடைந்தால்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள் எனறும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர்  பேசுகையில், முப்படைகளுக்கு ஒரே தலைமையை ஏற்படுத்தவிருப்பதாகவும் மோடி அறிவித்தார்.

ராணுவம், விமானப் படை, கடற்படை என தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் முப்படைகளை சீஃப் அஃப் டிபென்ஸ் ஸ்டாஃப்  என்ற ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரவும், முப்படைக்கும் ஒரே தலைவர் நியமனம் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும். வரும் ஆண்டுகளில் இதற்காக ரூ.3.50 லட்சம் கோடி செலவிடப்படும் என்றும், அனைவருக்கும் குடிநீர் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மோடி அறிவித்தார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகையை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி, புதிய அரசு பதவியேற்று 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய விஷயங்களை செயல்படுத்தியிருப்பதாகவும், நாட்டு மக்கள் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை நம்புகிறார்கள் என்றும் கூறினார்.

முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் வளர்ச்சியை 370 தடுத்து வந்ததால் அதனை ரத்து செய்துள்ளோம் என்றும் மோடி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com