சுடச்சுட

  

  வெள்ளத்தின் நடுவே சிக்கிய ஆம்புலன்ஸ்; வழிகாட்டிய துணிச்சல்மிக்க சிறுவன்; வைரலாகும் வீடியோ!

  By Muthumari  |   Published on : 15th August 2019 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Venkatesh_EPS12

  கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த இடத்தில் பாலத்தின் குறுக்கே சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு 12 வயது துணிச்சல் மிக்க சிறுவன் வழிகாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் ஹிரேராயன்கும்பி என்ற கிராமத்தில் உள்ள பாலம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில், உயிரிழந்த ஒரு பெண்மணி மற்றும் 6 குழந்தைகளுடன் ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்தது. யாத்கிர் மாவட்டத்தில் உள்ள மச்சனூர் என்ற கிராமத்திற்கு செல்ல வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நின்ற ஆம்புலன்ஸ் டிரைவர், சற்று தூரத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களில், 12 வயது சிறுவன் வெங்கடேசன் சிறிதும் யோசிக்காமல், நீர் சூழ்ந்த அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு வழிகாட்ட முன்வந்துள்ளார். பாலத்தின் கடைசி வரையில் வந்து ஆம்புலன்ஸிற்கு வழிகாட்டியதால் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் பாலத்தை கடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  இதுகுறித்து சிறுவன் வெங்கடேஷ் கூறும்போது, 'நான் செய்தது துணிச்சலான செயலா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆம்புலன்ஸ்-க்கு வழிகாட்ட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. நான்கு பக்கமும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வழி இருக்கிறதா, இல்லையா என டிரைவருக்குத் தெரியவில்லை. எனக்கு வழி தெரிந்ததால், நான் அவருக்கு உதவி செய்துள்ளேன்' என்று கூறினான். 

  கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வெங்கடேஷின் குடும்பமும் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடை சமயத்தின் போது பெற்றோருக்கு உதவி செய்வது அவரது வழக்கம். இயல்பாகவே மற்றவருக்கு உதவி செய்யும் பழக்கம்உள்ளவர் வெங்கடேஷ் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

  ராய்ச்சூர் மாவட்ட அதிகாரிகள், வெங்கடேஷிற்கு துணிச்சலுக்கான விருது வழங்க வேண்டும் என்று மாநில அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai