அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் நம்புகின்றனர்: ராம் லல்லா தரப்பு வாதம்

அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்து மக்கள் நம்புகின்றனர் என ராம் லல்லா விராஜ்மான் தரப்பு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.
அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் நம்புகின்றனர்: ராம் லல்லா தரப்பு வாதம்


அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்து மக்கள் நம்புகின்றனர் என ராம் லல்லா விராஜ்மான் தரப்பு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் தொடர்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ராம் லல்லா விராஜ்மான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிட்டதாவது:
அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்து புராணங்கள் பலவற்றில் கூறப்பட்டுள்ளது. அதை ஹிந்து மக்களும் முழுமையாக நம்புகின்றனர். இதை உச்சநீதிமன்றம் அறிவுசார்ந்த பார்வையில் ஆராயக் கூடாது. இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டினர் பலரும் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
பயணக் குறிப்புகள்: உதாரணமாக, 1608-ஆம் ஆண்டு முதல் 1611-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் வணிகரான வில்லியம் ஃபின்ச், தனது பயணக் குறிப்பில், அயோத்தியில் பெரும் மாளிகை ஒன்று இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த மாளிகையில் ராமர் பிறந்ததாக மக்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபின்ச்சின் பயணக் குறிப்பானது, ஆரம்பக்கால இந்தியப் பயணம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
இதேபோல், அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பிரிட்டிஷ் நிலஅளவை அதிகாரி மோண்ட்கோமேரி மார்ட்டின், கிறித்துவ மதபோதகர் ஜோசஃப் டீஃபன்தாலேர் போன்றோர்களும் அயோத்தி தொடர்பான இதே கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்றார் சி.எஸ். வைத்தியநாதன்.
ஆதாரங்கள் இல்லை: இதையடுத்து நீதிபதிகள், அயோத்தியிலிருந்த கட்டடம் பாபர் மசூதி என்று எப்போது முதல் அழைக்கப்பட்டு வருகிறது? என வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், 19-ஆம் நூற்றாண்டில் இருந்துதான் அந்தக் கட்டடத்தை பாபர் மசூதி என்று அழைத்து வந்துள்ளனர். 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக, அவ்வாறு அழைக்கப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றார்.
முகலாயப் பேரரசர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பாபர் நாமா என்ற புத்தகத்தில் கூட இந்த மசூதி குறித்து குறிப்பிடப்படவில்லையா? என்று நீதிபதிகள் வினவினர். அதற்கு வழக்குரைஞர், இல்லை என்று பதிலளித்தார். இதற்கு, சன்னி வக்ஃபு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவண் எதிர்ப்பு தெரிவித்தார். 
அவர் கூறுகையில், பாபர் நாமாவில் அயோத்தி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நதியைக் கடந்து பாபர் அயோத்தி சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அப்புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும் நமக்குக் கிடைக்காததால், அதில் பாபர் மசூதி பற்றி குறிப்பிடப்படவில்லை என்று மறுக்க முடியாது என்றார்.
இடித்தது யார்?: இதையடுத்து நீதிபதிகள், அப்படியானால், அயோத்தியிலிருந்த கோயிலை இடித்துத் தள்ள பாபர்தான் ஆணையிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு வழக்குரைஞர் வைத்தியநாதன் பதிலளிக்கையில், இதில் இருவேறு விதமான கருத்துகள் உள்ளன. அயோத்தியிலிருந்த கோயிலை பாபர்தான் இடித்தார் என ஒரு கருத்தும், முகலாய அரசர் ஒளரங்கசீப் தான் இடித்தார் என மற்றொரு கருத்தும் நிலவி வருகிறது. ஆனால், மசூதியிலிருந்த கல்வெட்டுகளின்படி, கோயிலை இடிக்க பாபர்தான் தனது அமைச்சரிடம் உத்தரவிட்டார் என்றும், மசூதியிலிருந்த 3 குவிந்த நிலையிலான மேற்கூரைகளை பாபர்தான் எழுப்பினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததும், அதை இடித்த பிறகே அங்கு மசூதி எழுப்பப்பட்டது என்பதும் உறுதியாகிறது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com