இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் கருத்துகளை மதித்து நடக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்

இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் முக்கியமான கருத்துகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் கருத்துகளை மதித்து நடக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்


இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் முக்கியமான கருத்துகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அவர் சீனாவில் மேற்கொண்ட மூன்று நாள் பயணம் திங்கள்கிழமை முடிவடைந்தது. முன்னதாக அவர் சீன துணை அதிபர் வாங் கிஷான் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்  வாங் யி ஆகியோரை சந்தித்துப் பேசினார். 
வாங் கிஷானுடனான சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியாவின் உள்விவகாரம் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பயணத்தின்போது இந்தியா-சீனா இடையே கலாசாரப் பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனிடையே, சீனாவின் அரசு ஊடகமான ஷின்ஹுவா-வுக்கு ஞாயிற்றுக்கிழமை ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய வளரும் நாடுகளாகவும், வளர்ந்து வரும் பொருளதார சக்திகளாகவும் உள்ளன. இந்த இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு என்பது உலகத்துக்கு மிக முக்கியமானது.
நமது கூட்டுறவு மிகவும் பெரியது. இது இனிமேலும் இருதரப்பு உறவு என்பதாக மட்டும் இருக்காது. இதற்கு உலகளாவிய பரிமாணம் உள்ளது.
மாறிவரும் உலகச் சூழ்நிலையில், இந்தியாவும் சீனாவும் தகவல் தொடர்பையும், ஒத்துழைப்பையும் அதிகரிப்பதோடு உலக அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பங்காற்ற வேண்டும்.
இந்தியாவும் சீனாவும்  ஒத்துழைத்துச் செயல்படக் கூடிய வலுவான துறைகளைக் கண்டறிய வேண்டும். இரு நாடுகளும் பரஸ்பரம் முக்கியமான கவலைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; கருத்து வேறுபாடுகளை சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இரு நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வரலாறு உள்ளது. உலகின் தொன்மையான நாகரிகங்களில் இரு நாட்டு நாகரிகங்களும் இடம்பெற்றுள்ளன. இவை கிழக்கத்திய நாட்டு நாகரிகங்களின் தூண்களாக விளங்கியுள்ளன.
இரு நாட்டு கலாசாரங்களும் எவ்வாறு பரஸ்பர தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பது குறித்த புரிதல் இரு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட பலருக்கும் இல்லை. அதிக அளவிலான கலாசாரப் பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அந்த வரலாறு குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானது.
இந்தியாவும் சீனாவும் உயர் நிலையிலான பரஸ்பர மக்கள் சந்திப்புகளை நடத்துவது என்று கடந்த ஏப்ரல் மாதம் முடிவெடுத்தன. அத்தகைய முதல் சந்திப்பு தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இது, இரு தரப்பு உறவு என்பதை குறுகிய தூதரக உறவுகளில் இருந்து பெரிய அளவிலான சமூக சந்திப்பாக மாற்றும் முயற்சியாகும்.
இரு நாட்டு மக்களும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடும்போது அவர்களின் நெருக்கம் அதிகரிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com