எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு-காஷ்மீருக்கு வரத் தயார்: ஆளுநருக்கு ராகுல் பதில்

எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜம்மு-காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மேலும், நான் எப்போது வரலாம்?
எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு-காஷ்மீருக்கு வரத் தயார்: ஆளுநருக்கு ராகுல் பதில்


எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜம்மு-காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மேலும், நான் எப்போது வரலாம்? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீரின் உண்மையான நிலவரத்தை காண வருமாறு, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளேன் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சுட்டுரையில் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவிட்ட ராகுல், காஷ்மீருக்கு நான் நிச்சயம் வருவேன். அதற்காக, நீங்கள் (ஆளுநர்) அனுப்பும் விமானம் தேவையில்லை. காஷ்மீரில் சுதந்திரமாக பயணித்து, அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பிரச்னையை தூண்ட ராகுல் காந்தி முயற்சிப்பதாகவும், இங்கு வருவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டினார்.
அவரது இந்த குற்றச்சாட்டு அற்பமானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், எந்த நிபந்தனையும் இல்லாமல், ஜம்மு-காஷ்மீருக்கு வருவதற்கும், அங்குள்ள மக்களை சந்திப்பதற்கும் தயாராக இருக்கிறேன். நான் எப்போது வரலாம்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com