காஷ்மீர் நிலைமை தொடர்பாக உலக நாடுகள் அமைதி காப்பது ஏன்? இம்ரான் கான் கேள்வி

காஷ்மீர் நிலைமை தொடர்பாக உலக நாடுகள் அமைதி காப்பது ஏன்? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் நிலைமை தொடர்பாக உலக நாடுகள் அமைதி காப்பது ஏன்? இம்ரான் கான் கேள்வி


காஷ்மீர் நிலைமை தொடர்பாக உலக நாடுகள் அமைதி காப்பது ஏன்? என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையை இந்திய அரசு அண்மையில் மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று கருத்து தெரிவித்த, இந்தியா, பாகிஸ்தானின் ஆட்சேபத்தை நிராகரித்தது.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இனி காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படும். 370ஆவது பிரிவால் பிரிவினைவாதம், ஊழல், குடும்ப ஆட்சி ஆகியவைதான் ஏற்பட்டன. அந்தப் பிரிவை பாகிஸ்தான் ஒரு கருவியாக வைத்துக் கொண்டு பயங்கரவாதத்தைப் பரப்பியது. இனி ஜம்மு-காஷ்மீரில் அனைத்துத் துறை வளர்ச்சி ஏற்படும். மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். அங்கு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், புதிய எதார்த்த நிலையை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனது உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசு கூறியது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்  தலைநகர் முசாஃபராபாதில் கொண்டாடும் நோக்கில் அந்த நகருக்கு பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை வந்தார்.

அங்குள்ள சட்டப் பேரவையில் அவர் பேசியது:
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது ராஜீய ரீதியிலான தவறாகும். இந்தியா காஷ்மீரில் விதித்துள்ள ஊரடங்கு உத்தரவின்போது அங்கு என்ன நடந்தாலும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று நாம் சர்வதேச சமூகத்திடம் கூறுவோம். உலகம் தற்போது காஷ்மீரையும் பாகிஸ்தானையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து சர்வதேச மன்றங்களிலும் நான் தூதராகச் செயல்பட்டு காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவேன். 
நமது நாட்டுக்கு எதிராக இந்தியா படையெடுத்தால் அதை பாகிஸ்தான் முழு பலத்துடன் எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும். ஏதோ ஒரு பெரிய தாக்குதலை நம் மீது தொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். இந்தியா எந்த வகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பாகிஸ்தான் உரிய வகையில் பதிலடி கொடுக்கும். 
உலகில் போர் ஏற்படாமல் தடுக்கவே ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் அதற்கு நீங்கள்தான் காரணம் என்று அந்த அமைப்புகளிடம் நாம் கூறுவோம். முஸ்லிம் நாடுகள் உள்பட ஒட்டுமொத்த உலகமும் தற்போது ஐ.நா. சபையையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐ.நா. பொதுச் சபையின் கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறும்போது யாருக்கு ஆதரவு என்பது தெரிய வரும் என்றார் இம்ரான் கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com