காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணை நிற்கும்: அதிபர் ஆரிஃப் ஆல்வி

காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஓர் மக்களே; காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் என்று துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கூறினார். 
காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணை நிற்கும்: அதிபர் ஆரிஃப் ஆல்வி


காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஓர் மக்களே; காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் என்று துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி கூறினார். 
பாகிஸ்தானின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாதில் புதன்கிழமை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் பேசியதாக பாகிஸ்தானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தி: 
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாகிஸ்தான் எப்போதும் உறுதியாக உள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிடும். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் ஐ.நா.வின் தீர்மானத்தை மட்டுமல்ல, சிம்லா ஒப்பந்தத்தையும் இந்தியா மீறியுள்ளது. 
இந்த விவகாரத்தில் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது. எந்தவொரு நிலையிலும் காஷ்மீர் மக்களை நாங்கள் தனித்து விட்டுவிட மாட்டோம். காஷ்மீரிகளும், பாகிஸ்தானியர்களும் ஓர் மக்களே. வலியும், கண்ணீரும் எங்கள் இருவருக்கும் பொதுவானது. நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம். என்றும் அவ்வாறே இருப்போம். 
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா அத்துமீறி குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண விரும்புகிறோம். எங்கள் அமைதியை, பலவீனம் என இந்தியா தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று அதிபர் ஆரிஃப் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 
தில்லியில்...: பாகிஸ்தான் சுதந்திர தினம், தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
அங்குள்ள தூதர் (பொறுப்பு), பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சுதந்திர தின உரையை நிகழ்ச்சியில் வாசித்தார். 
அதில், காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது என்றும், அந்த மக்கள் தங்களது சுய நிர்ணய உரிமையை பெறுவதற்கான போராட்டத்துக்கு அரசியல், தார்மிக, தூதரக உதவிகளை பாகிஸ்தான் வழங்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com