சிக்கிம்: மேலும் 2 எம்எல்ஏக்கள் கட்சி மாற்றம்

சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்டிஎஃப்)  10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிலையில், அக்கட்சியின் மேலும் 2 எம்எல்ஏக்கள் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.


சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்டிஎஃப்)  10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிலையில், அக்கட்சியின் மேலும் 2 எம்எல்ஏக்கள் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.
32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி, இந்த முறை 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இரு எம்எல்ஏக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்றிருந்ததால், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13-ஆக இருந்தது. 
இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து சிக்கிம் சட்டப்பேரவையில் ஓரிடம் கூட பெறாமல் இருந்த பாஜக, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
அதைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏக்கள், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.  இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கூறுகையில், ஆளும் கட்சி தலைமை சிறப்பாக செயல்படுகிறது; அக்கட்சியில் இணைந்தால் எங்களது தொகுதிகளுக்கு தேவையானதை செய்ய இயலும். ஆளும் கட்சியின் கொள்கைகள் எங்களைக் கவர்ந்ததால் அதில் இணைந்தோம் என்றனர்.
இவர்கள் இருவரும் கட்சி மாறியதால், எஸ்டிஎஃப் கட்சிக்கு இப்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். அவர், சிக்கிம் முன்னாள் முதல்வரான சாம்லிங் ஆவார். 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, சட்டப் பேரவையில் ஒரே ஒரு எம்எல்ஏவைக் கொண்டிருக்கும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் நேரடியாகவோ அல்லது கூட்டணி வைத்தோ பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சிக்கிமிலும் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்ததுடன், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com