ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இனி சம உரிமைகள்: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் பெருமிதம்

நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு இணையாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இனி சம உரிமைகள் கிடைக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இனி சம உரிமைகள்: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் பெருமிதம்


நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு இணையாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இனி சம உரிமைகள் கிடைக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி,  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தியத் தாயின் குழந்தைகளுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான நாளாகும். காலனியாதிக்க ஆட்சியிலிருந்து தியாகங்கள், போராட்டங்கள் வாயிலாக நமக்கு விடுதலை பெற்றுத் தந்த சுதந்திர போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரை இந்நாளில் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வோம். இன்றுடன் நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதேபோல், தேசத்துக்கு வெற்றிகரமாக விடுதலை பெற்றுத் தந்ததற்கு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளுக்கும் ஒளி விளக்காக திகழ்ந்த தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி  கொண்டாட இருக்கிறோம்.  மகாத்மா காந்தி வாழ்ந்த, பணியாற்றிய காலத்தில் இருந்த இந்தியாவுக்கும், தற்போதைய இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமுண்டு. ஆனால் தற்காலத்துக்கும் காந்தியின் அறிவுரைகள் மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. இயற்கையுடன் இயைந்து வாழ்வது, சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான காந்தியின் அறிவுரைகள், தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை முன்கூட்டியே அவர் எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரியப்படுத்துகிறது. பின்தங்கிய மக்கள் மற்றும் குடும்பங்கள் தொடர்பான நலத் திட்டங்களை உருவாக்கும்போதும், அதை செயல்படுத்தும்போதும் காந்தியின் தத்துவத்தையே பயன்படுத்துகிறோம். அதேபோல்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக சூரிய சக்தியை பயன்படுத்தும்போதும் காந்தியின் தத்துவத்தைத்தான் பயன்படுத்துகிறோம்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அப்பகுதிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன். இந்நடவடிக்கையால் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு, நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் அதே உரிமைகளும், அதே சலுகைகளும், அதே வசதிகளும் கிடைக்கும். நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மதிப்புமிக்க தலைவர்கள், நாட்டின் சுதந்திரத்தை அரசியல் அதிகார மாற்றம் என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்கவில்லை. தேச கட்டமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான  நீண்ட மற்றும் மிகப்பெரிய நடவடிக்கையின் ஒரு படியாகவே அதை கருதினர். தனி மனிதர் மற்றும் தனி குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைப்பது ஆகியவைதான் அவர்களின் நோக்கமாகும்.

அண்மையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள், ஏற்கெனவே இருக்கும் சட்டங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றாலும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயனடைவர். முத்தலாக் நடைமுறைக்கு முடிவு கட்ட கொண்டு  வரப்பட்டுள்ள சட்டத்தால், நமது மகள்களுக்கு நீதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியில் தொழில் புரிவோர் மூலதனத்தை எளிதில் பயன்படுத்தும் வகையிலும், நட்பு ரீதியிலான இணைய வரி அமைப்பு, வெளிப்படையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வங்கி அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட நிதி கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் தங்களது நுகர்வுகள், பழக்கங்களால் வேறுபட்டிருக்கலாம்; ஆனால் இந்தியர்கள் அனைவரின் கனவுகளும் ஒரே மாதிரியானதாகவே உள்ளன. 
கடந்த 1947ஆம் ஆண்டுக்கு முன்பு, சுதந்திர இந்தியா என்பது அவர்களது கனவாக இருந்தது. இன்றோ, துரிதமான வளர்ச்சி, துடிப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவையே அவர்களது கனவுகளாக உள்ளது. இந்த கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
அண்மையில் நடைபெற்ற 17-ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்தனர். இத்தேர்தலானது, மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கையாக அமைந்தது. இதற்காக வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன் என்றார் ராம்நாத் கோவிந்த்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களில் ஒன்றான மந்திரம் கற்போம், வினைத் தந்திரம் கற்போம் என்ற பாடலை ராம்நாத் கோவிந்த் தனது உரையில் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com