ஜம்முவில் கட்டுப்பாடுகள் நீக்கம்: காவல் துறை அதிகாரி தகவல்

ஜம்முவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகவும் காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் கார் ஓட்டுநர் ஒருவரின் அடையாள அட்டையை புதன்கிழமை சோதனை செய்த பாதுகாப்புப் படையினர்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் கார் ஓட்டுநர் ஒருவரின் அடையாள அட்டையை புதன்கிழமை சோதனை செய்த பாதுகாப்புப் படையினர்.


ஜம்முவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாகவும் காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, அங்கு கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதள சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் முனீர் கான் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஸ்ரீநகரின் சில பகுதிகளிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில மாவட்டங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைக் காவல் துறையினர் உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். இந்த வன்முறையில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. தற்போதைய நிலையில், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது.
ஜம்மு பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பள்ளிகளும், கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. அதே வேளையில், காஷ்மீர் பகுதியின் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. 
உற்சாகத்துடன் கொண்டாடலாம்: இத்தகைய சட்டம்-ஒழுங்கு சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து முழு விவரங்களையும் தெரிவிக்க இயலாது. ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட ஆட்சியர்களும், காவல் துறைக் கண்காணிப்பாளர்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வியாழக்கிழமை நடைபெற உள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடலாம். அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என நம்புகிறோம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றார் முனீர் கான்.
இயல்புநிலை திரும்புகிறது: இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் ரோஹித் கன்சால் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுகிறது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை தாராளமாகக் கிடைத்து வருகின்றன. சாலைப் போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது. விமான நிலையங்கள் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளன.
உள்ளூர் அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவையான இடங்களில் சில கட்டுப்பாடுகளையும் அவர்கள் விதித்து வருகின்றனர் என்றார் ரோஹித் கன்சால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com