பெலுகான் கொலை வழக்கு: பசுப் பாதுகாப்பு கும்பலை சேர்ந்த 6 பேரும் விடுதலை

ராஜஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்ச்சைக்குரிய பெலுகான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பசுப் பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 6 பேரும் நீதிமன்றத்தால் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.


ராஜஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்ச்சைக்குரிய பெலுகான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பசுப் பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 6 பேரும் நீதிமன்றத்தால் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் உள்ள பெக்ரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று பெலுகானும், அவரது 2 மகன்கள் மற்றும் சிலரும் பசுக்களை வாகனத்தில் கொண்டு சென்றபோது பசுப் பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த சிலரால் வழிமறித்து நிறுத்தப்பட்டனர். பின்னர், அவர்களை அக்கும்பல் கடுமையாக உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பெலுகான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதுதொடர்பான செய்திகள் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் அப்போது ஆட்சியிலிருந்த வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பசுப் பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த விபின் யாதவ், ரவீந்திர குமார், கலுராம், தயானந்த், யோகேஷ் குமார், பீம் ரதி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறார்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் விபின் யாதவ், ரவீந்திர குமார், கலுராம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு, அல்வாரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை கடந்த 7-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சரிதா சுவாமி தனது தீர்ப்பை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரிதா சுவாமி தனது தீர்ப்பை புதன்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், 6 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் சந்தேகத்தின் பலனை 6 பேருக்கும் அளித்து, அவர்களை விடுவிக்கிறேன் என்றார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து  அரசு வழக்குரைஞர் யோகேந்திர கடானா கருத்து கூறுகையில், தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லை; அதற்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும், முழுவதையும் படித்து பார்த்துவிட்டு, அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 சிறார் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு, அங்குள்ள சிறார் நீதி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com