ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 12 நாட்கள் ஆகிறது: ஜம்மு காஷ்மீர் எப்படி இருக்கிறது?

சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன், முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 12 நாட்கள் ஆகிறது: ஜம்மு காஷ்மீர் எப்படி இருக்கிறது?

ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன், முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

12வது நாளான இன்று மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. 

12 நாட்களுக்கு முன்பு இருந்த நிலையிலேயே காஷ்மீர் தற்போது வரை அமைதியான சூழ்நிலையிலேயே இருக்கிறது என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பிருந்ததைப் போலவே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், மக்கள் பக்கத்து நகரங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பதற்கு முன்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீரில் முழு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டது.  அதிகப்படியாக பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் மட்டுமே கூடுதலாக அமர்த்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதே சமயம், கர்ப்பிணிகள் பிரசவ காலத்துக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

சந்தைப் பகுதிகள் பலவும் திறக்கப்படாமலும், திறக்கப்பட்ட சந்தைகளும் வழக்கமான மக்கள் கூட்டத்தை சந்திக்காமல் வெறிச்சோடியும் காணப்படுகின்றன.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றினார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு கொண்டாடப்பட்ட முதல் சுதந்திர தினம் இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டார்.

விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் சத்யபால் மாலிக் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் வளர்ச்சிக்கும், அங்குள்ள மக்கள், தங்களின் மொழி மற்றும் கலாசாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் இது வழிவகுக்கும்.

ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார மேம்பாடு மற்றும்  வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றை இந்த நடவடிக்கை தகர்த்துள்ளது.

இதற்கு முன்னர் இங்கு தேர்தல்கள் நடைபெற்றபோது, உணவு, உடை, உறைவிடம் குறித்த பிரச்னைகளை எந்த தலைவர்களும் எழுப்பாமல் இருந்தது ஆச்சரியமளிக்கிறது. முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்காமல், தேவையற்றதை பேசி, மக்கள் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டிருந்தனர்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இங்கு நல்ல நிர்வாகத் தலைமை அமையும். வேலைவாய்ப்பு பெருகும். ஜம்மு-காஷ்மீர் தன்னிறைவு பெறும். குறிப்பாக, நாட்டின் மற்ற பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே வரத்தொடங்கும்.

மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால், நமது அடையாளம் அனைத்தும் அழிந்து விட்டதாக மக்கள் யாரும் வருத்தமடைய வேண்டாம். ஜம்மு-காஷ்மீர் மக்களின் தனித்துவ அடையாளத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக, பல பிராந்திய மக்களின் தனித்துவ அடையாளங்கள் மேன்மேலும் வளர்ச்சியடைந்துள்ளன. காஷ்மீரி, டோக்ரி, பால்டி உள்ளிட்ட மொழிகளின் சிறப்புகள் வெளியில் தெரிய வரும்.

இதுவரை சட்டப் பேரவையில் பிரதிநிதியாக இடம் பெற முடியாமல் இருந்த பழங்குடி மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட் சமூகத்தினரை மீண்டும் இங்கு குடியமர்த்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

காஷ்மீரில் இருந்து வெளியேறி மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்புவதற்கு உள்ளூர் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆட்களைச் சேர்ப்பது, கல் வீசித் தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவை இப்போது குறைந்துள்ளன என்று சத்யபால் மாலிக் கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை பிரித்து, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதற்கும் சட்டமியற்றப்பட்டது. வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடைபெற்ற முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய  அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த சிலர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com