ஆயுஷ்மான் திட்டத்தால் கல்லா கட்டிய தனியார் மருத்துவமனைகள்: முறைகேட்டின் உச்சம் இது!

ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்த ஆயுஷ்மான் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் நடத்திய விதவிதமான முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்துள்ளது.
ஆயுஷ்மான் திட்டத்தால் கல்லா கட்டிய தனியார் மருத்துவமனைகள்: முறைகேட்டின் உச்சம் இது!


ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்த ஆயுஷ்மான் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் நடத்திய விதவிதமான முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்ய திட்டத்தில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன. ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற வழி வகை செய்யும் இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்களுக்கு பலன் கிடைத்ததோ இல்லையோ, தனியார் மருத்துவமனைகளுக்கு ஏகப்பட்ட தீணி கிடைத்து கொழுத்துக் கிடக்கின்றன.

இது குறித்து முழு விவரங்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மிகச் சிறிய மாநிலமான உத்தரகாண்டில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் முறைகேடு செய்து ரூ.1.20 கோடியை மத்திய அரசிடம் இருந்து சுருட்டியுள்ளன. 

இந்த ஒரே ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் செய்த முறைகேடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சில முக்கிய முறைகேடுகளை மட்டும் இங்கே பட்டியிலிடுகிறோம். முழுவதையும் பட்டியலிட ஒரு ஆயுள் போதாது என்பதால்.

எப்போதோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிப்போன நோயாளிக்கு இன்றைய தேதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி முறைகேடு.
நோயாளி ஒருவருக்கு டயாலிஸிஸ் செய்ததாக அறிக்கை. ஆனால், அந்த மருத்துவமனையில் ஒரு சிறப்பு மருத்துவரும் இல்லை.
ஒரு நபருக்கு வேறு எங்கோ, எப்போதோ நடந்த அறுவை சிகிச்சையை, தனது மருத்துவமனையில் செய்ததாகக் கூறி அறிக்கை.
ஐசியுவில் இருந்து நேரடியாக 12 நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். (யாருமே ஐசியுவில் இருந்து நேரடியாக டிஸ்சார்ஜ் ஆக மாட்டார்கள்)

14 மணி நேரத்தில் ஒரு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர்தான் பணியில் உள்ளார்.

ஒரு மருத்துவமனை கடந்த 45 நாட்களில் 38 அவசரகால கண்புரை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளன. எல்லாமே இரவு 9.30 மணிக்கு மேல்தான். (கண்புரை அறுவை சிகிச்சை எதுவுமே அவசர கால சிகிச்சையாக செய்யப்படாது.)

இப்படி செய்யப்படாத சிகிச்சைகளை செய்ததாகக் கூறி கோடிக்கணக்கான பணம், தனியார் மருத்துவமனைகள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கெல்லாம் உச்சகட்டமாக மருத்துவமனைக்கு, ஆயுஷ்மான் திட்டம் பற்றி விசாரிக்க ஸ்கூட்டியில் வந்த நபரது பெயர், எமர்ஜென்ஸியாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் பட்டியலில் இருந்ததுதான்.

இதுபோன்ற மோசடியால் ஆயுஷ்மான் திட்டத்தில் உத்தரகாண்டில் இணைக்கப்பட்டிருந்த 154 மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசிடம் இருந்து காப்பீட்டுத் தொகையாக பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com