காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காத அரேபிய நாடுகள் !

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான நாடுகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்தக்


ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான நாடுகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சவூதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இம்ரான் கான் அண்மையில் தொலைபேசி மூலம் உரையாடினார். அப்போது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பது, அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருப்பது குறித்து புகார் தெரிவித்தார். பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் கானிடம் எந்த பதிலை கூறியது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.
இருப்பினும் சவூதி அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, தற்போதைய நிலவரத்தை சவூதி அரேபியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பிரச்னைக்கு சர்வதேசத் தீர்மானங்களின்படி தீர்வு காணப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இன்னொரு அரேபிய நாடான ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. அந்நாடு கூறுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ளது.
எனினும், துருக்கி மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. 
ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானியும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகமும் வெளியிட்டுள்ள அறிவிப்புகளிஸ், இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு அரேபிய நாடுகள் பரவலாக ஆதரவளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை, அந்த நாடுகளில் துருக்கியைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து வெளியிடவில்லை. இதற்கு இந்தியாவுடனான அரேபிய நாடுகளின் வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் ரூ.7.15 லட்சம் கோடியாக (100 பில்லியன் டாலர்) அதிகரித்திருப்பதும், அந்நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு, அதிகரித்து வரும் இந்தியர்களின் முதலீடு ஆகியவையே காரணமாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com