370-ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரணாக விளங்கியது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவானது, பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரணாக விளங்கியதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
370-ஆவது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரணாக விளங்கியது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவானது, பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரணாக விளங்கியதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கும் தீர்மானத்துக்கும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கும் நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 

இதற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டு நலன் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலன் கருதியே அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. 

இது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த தற்காலிகப் பிரிவே என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டு மக்களையும், ஜம்மு-காஷ்மீர் மக்களையும் பாதுகாப்பதே மத்திய அரசின் தலையாய நோக்கமாகும்.

பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் 370-ஆவது பிரிவானது, பாதுகாப்பு அரணாக விளங்கியது. இதற்கு மத்திய அரசு முடிவுகட்டியுள்ளது. 

ஊழல் தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குப் பயன் தராமல் இருந்தன. தற்போது அங்குள்ள மக்கள் அதிக அளவில் பயன் பெற முடியும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
இதைத் தொடர்ந்து, பாலாகோட் தாக்குதல் போன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், ""இதுபோன்ற அனுமானங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும். பாதுகாப்புப் படையினர் அனைவரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

விசாரணைக் கைதிகளுக்கு ஆதரவு: முன்னதாக, அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், ""பல்வேறு நபர்கள் தேவையின்றி விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட குற்றங்களுக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள், அந்தக் குற்றத்துக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையில் பாதியை சிறையில் அனுபவித்துவிட்டால், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். பெண் விசாரணைக் கைதிகள், அதிகபட்ச தண்டனையில் கால்பங்கை சிறையில் அனுபவித்திருந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன். இந்தக் கோரிக்கைகளை, தகுந்த குழு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com