இனி பேச்சுவார்த்தை என்றால் 'பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி' குறித்து மட்டுமே: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து தான் இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
இனி பேச்சுவார்த்தை என்றால் 'பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி' குறித்து மட்டுமே: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து தான் இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி, இன்று முதல் செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்திக்கும் பொருட்டு, பாஜக சார்பில் யாத்திரை நடத்தப்படுகிறது.   

இன்று நடைபெற்ற 'ஜன் ஆசிர்வாத் யாத்ரா' தொடக்க விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

விழாவைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான முடிவுகளையே எடுத்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா வரையில் கொண்டு சென்று இந்தியா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பாகிஸ்தான் நினைக்கும் போது, இனி பாகிஸ்தானுடன் இந்தியா எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது. இதன்பின்னர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து தான் இருக்கும். அதுவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தினால் தான், பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் முடிவு செய்வோம்.

பாலாகோட் தாக்குதலை விட இந்தியா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகிறார். இதன்மூலம், பாலக்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதை அவரே உறுதி செய்கிறார்" என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com