அன்னபாக்கியா திட்டத்தில் அரிசி அளவை குறைத்தால் போராட்டம்: சித்தராமையா

அன்னபாக்கியா திட்டத்தில் வழங்கப்படும் அரிசி அளவை குறைத்தால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா
அன்னபாக்கியா திட்டத்தில் அரிசி அளவை குறைத்தால் போராட்டம்: சித்தராமையா

அன்னபாக்கியா திட்டத்தில் வழங்கப்படும் அரிசி அளவை குறைத்தால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசில் ஏழைகள் பயனடைவதற்காகவும், இருவேளை உணவை உண்பதற்காகவும் அன்னபாக்கியா திட்டத்தின்கீழ் ஒருவருக்கு  7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அரிசியை இலவசமாகப் பெறலாம். 

இந்த நிலையில், பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதியுதவி திட்டத்தில் மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதியுதவியுடன், கர்நாடக அரசின் பங்காக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப் போவதாக, புதிய திட்டத்தை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 

இந்தத் திட்டத்திற்கு நிதி ஆதாரம் திரட்டும் நோக்கில், அன்னபாக்கியா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியின் அளவை குறைத்து, அதனால் மிச்சமாகும் நிதியை பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதியுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்த கர்நாடக பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

இது உண்மையானால், அது மக்கள் விரோதப் போக்காகக் கருதப்படும். இந்த முடிவை ஏழை மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். 
அன்னபாக்கியா திட்டத்தின்கீழ் வழங்கப்படும்  அரிசி அளவை குறைத்தால், காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். சட்டப்பேரவைக்கு உள்ளே, வெளியே போராட்டங்கள் நடக்கும். 
மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்திலும் அன்னபாக்கியா திட்டம் தொடர்ந்தது.
பெங்களூரு மாநகராட்சி வாயிலாகச் செயல்படுத்தப்படும் மலிவு விலை உணவகமான இந்திரா உணவகத்துக்கும் கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தத் திட்டத்துக்கு ஒதுக்க வேண்டிய ரூ.200 கோடியை இன்னும் அளிக்கவில்லை. 
இந்திரா உணவகம் திட்டத்தை பெங்களூரு மாநகராட்சியே நடத்தவேண்டும் என்று மாநில அரசு கூறுவது சரியல்ல. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் நிதியுதவி அவசியமாகும். 
எனது சொந்தத் தொகுதியான பாதாமி உள்ளிட்ட வட கர்நாடகப் பகுதிகளுக்கு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறேன். 
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிவேன். வெள்ள நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு இதுவரை மத்திய அரசு நிதியுதவி செய்யாதது சரியல்ல என்றார்  சித்தராமையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com