ஹிமாசல்: வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்பு

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காங்க்ரா உள்ளிட்ட சில மாவட்டங்களில் "ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலாம்பூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 6 பேரும், குலு பகுதியில்
ஹிமாசலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு.
ஹிமாசலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு.

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காங்க்ரா உள்ளிட்ட சில மாவட்டங்களில் "ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலாம்பூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 6 பேரும், குலு பகுதியில் சிக்கிய 2 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.மாநிலத்தில் ஓடும் பெரும்பாலான நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பலாம்பூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அங்கிருந்த நதிகளில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அங்கு சுற்றுலா சென்றிருந்த 6 பேர், நியூகல் கட் அணையருகே சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் பேரிடர் மீட்புப் படையினரால் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக மீட்டனர். 
அதைப்போல, குலு மாவட்டத்தில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்நதிக்கு அருகே வெள்ளத்தில் சிக்கிய 2 பேர், பல மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நூர்பூர் பகுதியில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் சேதமடைந்தன. மலைப் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் சத்ரு-தர்மசாலா, சம்பா-பதான்கோட் இடையிலான சாலைகள் துண்டிக்கப்பட்டன. 
காங்க்ரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அந்தப் பகுதிகளில் "ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
காஷ்மீரில் 16 பேர் மீட்பு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்முவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் ஓடும் பெரும்பாலான நதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ராஜஸ்தானில் 5 பேர் பலி: ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மெளன்ட் அபு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 137 மி.மீ. மழை பதிவாகியது. மழை தொடர்பான இடர்களால், கடந்த 24 மணி நேரங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கொல்கத்தாவில் கனமழை: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் பல இடங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரங்களில் 184.1 மி.மீ மழை பதிவாகியது. சாலைகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால், கொல்கத்தாவில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com