
ஜம்மு-காஷ்மீரில் நில உரிமையாளர்கள், ஏழை விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில், அவர்கள் அந்த மாநில நிரந்தர குடிமக்கள் என்பதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேசிய சிறுத்தைகள் கட்சி (என்பிபி) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தேசிய சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனை, நாங்கள் வரவேற்கிறோம். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக படித்த இளைஞர்கள், அறிவார்ந்த சமூகத்தினர் மத்தியில் சில சந்தேகங்களும், நியாயமான கவலைகளும் எழுந்துள்ளன. அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழை விவசாயிகளின் நிலங்கள், வெளிமாநில பணக்காரர்கள் மற்றும் அதிகாரமிக்க மாஃபியா கும்பலால் கைப்பற்றப்பட வாய்ப்புள்ளது.
எனவே, இங்குள்ள நில உரிமையாளர்கள், ஏழை விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று
என்பிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.