விபத்துகளைத் தடுக்க படகோட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநில அரசு!

விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், படகு விபத்துகளை தடுக்க  அம்மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. 
விபத்துகளைத் தடுக்க படகோட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநில அரசு!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா, யமுனா உள்ளிட்ட பெரு ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகள் பல செல்கின்றன. இதனால் இம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் படகு போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. 

அவ்வாறு படகு சவாரி செய்யப்படும் போது, நீர்ச்சூழலில் படகு கவிழ்ந்து பல விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மேலும், சமீப காலத்தில் இந்த விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், படகு விபத்துகளை தடுக்க  அம்மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. 

இது தொடர்பாக, நிவாரண ஆணையர் ஜி.எஸ்.பிரயதர்ஷி அனைத்து மாவட்ட தலைநகர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: முதலில், மாநிலம் முழுவதும் எவ்வளவு படகுகள் இயக்கப்படுகின்றனவோ, அவையனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம். பதிவு செய்யப்பட்ட படகுகள் அனைத்திற்கும் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்க வேண்டும்.

புதியதாக வாங்கப்படும் படகுகளும் முறையாக அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத படகுகளை இயக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது.

படகுகளின் விபரங்கள் மற்றும் படகோட்டிகளின் விபரங்கள் பஞ்சாயத்து அல்லது மாவட்ட அளவிலான அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும்.  மேலும், எந்த நேரத்திலும் படகுகளை ஆய்வு செய்ய பஞ்சாயத்திற்கும், மாவட்ட அதிகாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

படகை செலுத்தும் திறைமையை வைத்து படகோட்டிகள் 'ஸ்கில், செமி ஸ்கில்' என இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்படவுள்ளனர். வானிலை மோசமாகும் சமயத்தில், பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், படகோட்டிகளுக்கு வானிலை குறித்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். அதேபோன்று படகில் பயணம் செய்யும் மக்களுக்கு தெரியும் விதத்தில், அதற்கேற்ப கொடிகளை ஆற்றைக்கரையில் பறக்க விட வேண்டும்.  

மக்களுடன் எந்த விலங்குகளையும் படகில் ஏற்றிச் செல்லக்கூடாது. அவ்வாறு விலங்குகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் உரிமையாளரை மட்டும் அழைத்துச் செல்லலாம். படகில் எப்போதும் முதலுதவிப் பெட்டி, ஆற்றில் மிதக்கும் ஜாக்கெட்ஸ் உள்ளிட்டவைகளை வைத்திருப்பது அவசியம். 

இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு படகை செலுத்துவது, ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து படகோட்டிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் மாநில அரசால் நடத்தப்படவுள்ளன. 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவிலே நீர்வழிப் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்க முதல் முறையாக மாநில அரசு நடவடிக்கை எடுப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com