காஷ்மீர் விவகாரத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை: பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கருத்து

காஷ்மீர் விவகாரத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். 
காஷ்மீர் விவகாரத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை: பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கருத்து

காஷ்மீர் விவகாரத்தில், ஒரு இந்தியனாக நான் பெருமைப்படவில்லை என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தது. மேலும், இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

காஷ்மீர் விவகாரத்தில் ஆளும் கட்சி மட்டுமின்றி பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸில் கூட ஒரு சாரார் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 'காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது காஷ்மீரிய மக்களே. காஷ்மீர் அவர்களுக்கு சொந்தமான இடம். எனவே, அவர்களின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது தவறு. ஜனநாயகம் இல்லாமல் காஷ்மீரில் எந்தவொரு தீர்மானமும் இருக்கக்கூடாது. 

மத்தியில் பெரும்பான்மை ஆட்சியினால் ஏற்பட்டுள்ள விளைவு இது. இந்த விஷயத்தில் ஒரு இந்தியனாக நான் பெருமைகொள்ளவில்லை. மேற்கத்திய நாடுகள் இன்றி ஜனநாயகத்தை தேர்வு செய்த முதல் நாடு இந்தியா.  ஜனநாயகத்தை தேர்வு செய்ததுடன், அதனை சிறப்பாக கடைப்பிடிக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பெருமையை தற்போது இந்தியா இழந்துள்ளதாக நான் கருதுகிறேன்.

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்களை சிறைவைத்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். காஷ்மீரை ஆட்சி செய்த தலைவர்களை கேட்காமல் முடிவெடுத்தது நீதித் தன்மையற்றது. ஜனநாயகத்தை வெற்றிகரமாக வைத்திருக்கும் முக்கியக் காரணிகள் சிதைக்கப்படுகின்றன.  

ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறியது. இவ்வாறு கூறி தான் சுமார் 200 ஆண்டுகள் பிரிட்டிசார் நம்மை ஆட்சி செய்தனர். மீண்டும் காலனி ஆதிக்கவாதிகளின் பிடியில் நாம் செல்கிறோம்' என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com