குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர்கள்! காஷ்மீர் இயல்புநிலைக்குத் திரும்பியதா?

இன்னும் பல இடங்களில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அதனால் வரும் பிரச்னையை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். 
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர்கள்! காஷ்மீர் இயல்புநிலைக்குத் திரும்பியதா?

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தது. மேலும், இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதன் காரணமாக கடந்த இரு வாரங்கள் ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்னதாக இந்த கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டன.

ஆனால், சில இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருவதால், காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பிலே உள்ளது. மேலும், காஷ்மீரில் நெட்ஒர்க் மற்றும் இணையதள சேவைகள் இன்னும் வழங்கப்படவில்லை. பி.எஸ்.என்.எல் சேவை மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. 

தொடர்ந்து, திங்களன்று காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள 200 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட ஒரு சில பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

பல பள்ளிகளில் 10%க்கும் குறைவாகவே மாணவர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அரசுப்பள்ளிகளே திறக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில், இயல்புநிலை திரும்பிய சூழல் நிலவினாலும், அங்குள்ள மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய நிலையிலே உள்ளனர். மொபைல் நெட்ஒர்க் மற்றும் இன்டர்நெட் சேவை இல்லாததால் பெற்றோர்கள் பல பள்ளிகளுடன் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

இதுகுறித்து,  காஷ்மீரில் உள்ள மக்கள் கூறும் போது, இன்னும் பல இடங்களில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அதனால் வரும் பிரச்னையை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் வகுப்புகளை நடத்த அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டுள்ளன. எனவே, காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com