அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒரு வாரம் கெடு

தில்லி லுடியன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி குடியிருக்கும் முன்னாள் எம்.பி.க்கள், ஒரு வாரத்துக்குள்
அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒரு வாரம் கெடு


தில்லி லுடியன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி குடியிருக்கும் முன்னாள் எம்.பி.க்கள், ஒரு வாரத்துக்குள் அவற்றைக் காலி செய்ய வேண்டும் என இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான மக்களவைக் குழு திங்கள்கிழமை உத்தரவிட்டது. 

அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு இணைப்புகளை 3 நாள்களுக்குள் துண்டிப்பதற்கும் அந்தக் குழு உத்தரவிட்டுள்ளது. 

16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கும் அதிகமானோர் தில்லியில் உள்ள அரசு பங்களாக்களில் இருந்து காலி செய்யவில்லை. அந்த பங்களாக்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஊடகங்களில் திங்கள்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான மக்களவைக் குழு, அதன் தலைவர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் திங்கள்கிழமை கூடியது. 
அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், லுடியன்ஸ் பகுதியில் அரசு பங்களாக்களில் தங்கியிருக்கும் முன்னாள் எம்.பி.க்கள் அங்கிருந்து காலி செய்வதற்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்படுகிறது. 

அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு இணைப்புகளை 3 நாள்களுக்குள் துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தாங்கள் குடியிருக்கும் பங்களாக்களில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று இதுவரை எந்தவொரு எம்.பி.யும் கூறவில்லை என்றார். 
விதிகளின்படி, ஒரு மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாக முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாவைக் காலி செய்ய வேண்டும். 

ஆனால், 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டு இரு மாதங்கள் ஆகியும் முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாக்களை காலி செய்யாததால், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் தில்லியில் உள்ள மாநில அரசு இல்லங்களிலும், வெஸ்டர்ன் கோர்ட் எனப்படும் எம்.பி.க்களுக்கான விடுதியிலும் தங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com