கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

கர்நாடக முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்த விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டு, அவர்கள் பதவியேற்க உள்ளனர். 
கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்


கர்நாடக முதல்வராக எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்த விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டு, அவர்கள் பதவியேற்க உள்ளனர். 

கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத -காங்கிரஸ் கூட்டணி அரசு ஜூலை 23-இல் கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவரான எடியூரப்பா  முதல்வராக ஜூலை 26-இல் பதவியேற்றார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் ஜூலை 29-இல் நடைபெற்ற தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.   அவரைத் தவிர, அமைச்சராக யாரும் பதவியேற்காததால்,  வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியை எடியூரப்பா மட்டும் தன்னந்தனியாகக் கவனித்து வந்தார். 
கடந்த 25 நாள்களாக தனியாக அமைச்சரவையை நடத்தி வந்த எடியூரப்பாவை காங்கிரஸ்,  மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இதைத் தொடர்ந்து,   அமைச்சரவையை அமைக்க எடியூரப்பா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தார்.  கடந்த ஆக. 16-இல் புது தில்லி சென்றிருந்த எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து அமைச்சரவை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று திரும்பினார். 
இதைத் தொடர்ந்து,  பெங்களூரில் உள்ள  ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பதவியேற்கின்றனர்.

13 பேர் இடம்பெற வாய்ப்பு?
இதுகுறித்து பெங்களூரில் எடியூரப்பா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
அமைச்சரவையில் இடம்பெறுவோர் குறித்த தகவல் அமித் ஷாவிடம் இருந்து கிடைத்துவிடும்.  
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தலைமைச் செயலாளரையும் கேட்டுள்ளேன்.  அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பின்னர்,  அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்.   முதல்கட்டமாக 13 அல்லது 14 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவர்.  ஒன்றிரண்டு பேர் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம் என்றார்.

தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?: மஜத- காங்கிரஸ்  கூட்டணி அரசு கவிழ்வதற்கும், பாஜக அரசு அமைவதற்கும் காரணமாக இருந்த மஜத, காங்கிரஸ் கட்சியைச் 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாததால் 17 பேரில் யாருக்கும் அமைச்சராக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
அமைச்சரவையில் இடம்பெறுவோரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும்,  அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷும் இணைந்து  முடிவு செய்வதால்,   தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எடியூரப்பாவிடம் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com