ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும்
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு


ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்பாக, ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. 
யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் விரைவில் சொந்த ஊருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 
இணையச் சேவை நிறுத்தப்பட்டது. போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீர் மக்கள் பதற்றமான சூழலுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், ஜம்முவில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எல்லையில் அமைந்துள்ள ரஜெளரி, பூஞ்ச், தோடா ஆகிய மாவட்டங்களிலும், ராம்பன் மாவட்டத்தில் உள்ள செனாப் பள்ளத்தாக்கிலும், கிஷ்த்வார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. ஜம்மு பிராந்தியம் முழுவதும் அமைதி நிலவுவதால் அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.
ரஜெளரியில்...: ரஜெளரி மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் திங்கள்கிழமை திறக்கப்பட்டதாக, அந்த மாவட்டத்தின் சார்-ஆட்சியர் இஜாஸ் ஆசாத் கூறினார். சட்டம்-ஒழுங்கு இயல்புநிலைக்குத் திரும்பியதால் மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளும், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
பூஞ்ச்சில்..: பூஞ்ச் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளைத் தவிர, அனைத்து கல்வி நிலையங்களும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.  கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கிஷ்த்வாரில்...: பதற்றமாகக் காணப்படும் கிஷ்த்வார் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் தாங்களாக முன்வந்து திங்கள்கிழமை பள்ளிக் கூடங்களைத் திறந்தன. அரசு நடத்தும் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரபூர்வமாக வகுப்புகளைத் தொடங்கவுள்ளன. இதேபோல், ஏர்டெல் தொலைபேசி சேவையும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கவுள்ளது.
ராம்பனில்...: ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் கோட்டத்தை தவிர, அனைத்துப் பகுதிகளிலும் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டன.
தோடா...: தோடா மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்த 5 மாவட்டங்களிலும் பதற்றமான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துணை ராணுவப் படையினரும், போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர், ரியாஸி ஆகிய 5 மாவட்டங்களிலும் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால், அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 10-ஆம் தேதியே திறக்கப்பட்டு விட்டன.
காஷ்மீரில் மாணவர்கள் வருகை குறைவு: காஷ்மீரில் திங்கள்கிழமை மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் 190 ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
காஷ்மீரில் கடந்த இரு தினங்களாகப் பதற்றமான சூழல் நிலவியதால், திங்கள்கிழமை குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்கினர். 
இதனால், ஸ்ரீநகரில் அனைத்து தனியார் பள்ளிகளும் 15-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மூடப்பட்டிருந்தன. சில கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன.
அமித் ஷாவுடன் அஜித் தோவல் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு விரைந்த அஜித் தோவல், கடந்த 10 நாள்களாக அங்கு முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளை நேரில் கண்காணித்து வந்தார். ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பியதை உறுதிசெய்த பிறகு தில்லி திரும்பிய அவர், அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நிலைமை குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கெளபா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com