நீதிமன்றத்தில் விரைவில் சரண்: அனந்த் சிங் எம்எல்ஏ

பிகாரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்எல்ஏவும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்படுபவருமான அனந்த் சிங், நீதிமன்றத்தில் விரைவில் சரணடைய இருப்பதாக தெரிவித்தார்.


பிகாரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்எல்ஏவும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்படுபவருமான அனந்த் சிங், நீதிமன்றத்தில் விரைவில் சரணடைய இருப்பதாக தெரிவித்தார்.
மொகாமா தொகுதி எம்எல்ஏ.வான அவர், விடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
கைது நடவடிக்கைக்கு நான் அஞ்சவில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள எனது நண்பரைக் காண வந்தேன். இன்னும் 3 அல்லது 4 நாள்களில் நீதிமன்றத்தில் சரணடைவேன்.
அதற்கு முன்பு நான் எனது வீட்டுக்குச் செல்வேன். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பேன்.
நான் எனது மூதாதையரின் வீட்டுக்கு 14 ஆண்டுகளாக செல்லவில்லை. அப்படியிருக்கையில் அங்கு எப்படி ஏ.கே. 47ரக துப்பாக்கியை வைப்பேன்?
முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்துப் பேச முயன்றேன். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று அந்த விடியோவில் பேசியுள்ளார்.
இதனிடையே, அனந்த்சிங் எம்எல்ஏவுக்கு சொந்தமாக பாட்னாவில் இருக்கும் இன்னொரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் சோட்டா சிங் என்பவர் அங்கு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து சோட்டா சிங்குக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக அனந்த் சிங் எம்எல்ஏ மீது தலைமைச் செயலக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாட்னா மாவட்டம், லாட்மா கிராமத்தில் உள்ள அனந்த் சிங்கின் மூதாதையர் வீட்டில் போலீஸார் அண்மையில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ஏ.கே. 47 ரக துப்பாக்கி, துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. 
இதையடுத்து அனந்த் சிங் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், ஒப்பந்ததாரரை மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், அனந்த் சிங் எம்எல்ஏ தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com