ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சுவர் ஏறி குதித்து சிதம்பரம் இல்லத்தில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் (விடியோ உள்ளே)

தில்லியில் உள்ள ப. சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளனர். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சுவர் ஏறி குதித்து சிதம்பரம் இல்லத்தில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் (விடியோ உள்ளே)


தில்லியில் உள்ள ப. சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து நுழைந்துள்ளனர். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, ப. சிதம்பரம் இல்லத்துக்கு விரைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 மணி நேரத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர். 

இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளியன்று நடைபெறுகிறது. இதனிடையே, ப. சிதம்பரம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தலைமறைவாகவுள்ளதாக பரவலாக செய்திகள் பரவின. 

இந்த நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன் தரப்பு வாதங்களை விவரித்த சிதம்பரம், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் என்னுடைய பெயர் கூட இடம்பெறவில்லை என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோருடன் தனது இல்லத்துக்குச் சென்றார். 

இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் இல்லத்துக்குச் சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். 

முன்னதாக, ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  

"ஜனநாயகத்தின் அடித்தளமே சுதந்திரம்தான். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த காலத்தில் எனக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை சுதந்திரமாக அனுபவித்து வந்தேன். இந்த வழக்கில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் நான் தவறிழைத்ததாக முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து பொய்யர்களால் தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் நிறைய குழப்பங்கள் எழுந்துள்ளது. இந்தக் குழப்பங்களைத் தீர்க்கவே நான் தற்போது இதை விவரிக்கிறேன். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறேன். முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து எனது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாக, நேற்று இரவு முழுவதும் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக வழக்கறிஞர்களுடன் இருந்தேன். சட்டத்தை நான் மதிக்கிறேன். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சட்டத்தை மதிப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்" என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com