சுடச்சுட

  

  ஜி-7 மாநாட்டில் மோடியைச் சந்திக்கிறார் டிரம்ப்: காஷ்மீர் குறித்து பேசுகிறார்

  By DIN  |   Published on : 22nd August 2019 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  trumpmodi


  ஜி-7 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளார். அப்போது அவருடன், காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

  பிரான்ஸ் நாட்டில் இந்தவார இறுதியில் ஜி-7 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு, டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் செல்லவுள்ளனர். அப்போது மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை டிரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

  இதுகுறித்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
  ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க முயற்சி எடுப்பதையும், அதற்கு உதவுவதையும் நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளேன். பிரான்ஸ் நாட்டில் இந்த வார இறுதியில் அவருடன் பேச இருக்கிறேன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில்தான் அமெரிக்கா வந்திருந்தார். இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் இருவரிடையேயும் பேசி வருகிறேன்.

  காஷ்மீர் விவகாரம் மிகவும் கடினமானது. இந்தியாவும், பாகிஸ்தானும் ஹோவிட்சர் ரக பீரங்கிகளையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வருகின்றன. இது மிகவும் நீண்டகாலத்துக்கு நீடிக்கும். எனவே, இந்த விவகாரத்துக்கு தீர்வு காண உதவலாம் என நினைக்கிறேன். ஆனால், அந்த இரு நாடுகள் இடையேயும் மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் நிலவுகின்றன. எனவே இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவோ அல்லது வேறு உதவியையோ செய்வேன்.
  இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் இருவரிடையேயும் எனக்கு நட்புறவு உள்ளது. ஆனால் அவர்கள் இடையே தற்போது சுமுக உறவில்லை. நிலவரம் சிக்கலாகவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் சிக்கல் நிலவுவதற்கு மதமும் ஒரு காரணம். மதம் தொடர்பாக ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன என்றார் டிரம்ப்.

  இதனிடையே, அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, காஷ்மீர் தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஆதரிப்பதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுத்து நிறத்துவது தொடர்பாக அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai