Enable Javscript for better performance
ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

  

  ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை

  By DIN  |   Published on : 22nd August 2019 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pc1

  தில்லி ஜோர்பாக் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து, ப.சிதம்பரத்தை புதன்கிழமை இரவு கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிஐ அதிகாரிகள்.


  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 

  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் மூலம் உடனடியாக தடை பெறுவதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ப.சிதம்பரம் கைதாகியுள்ளார்.

  முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து, அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டிருந்தன. எனினும், ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்? என்ற கேள்வி நிலவி வந்த சூழலில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவில் அவர் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டின் வெளிக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததை அடுத்து, 5 அடி உயரமுள்ள மதில் சுவரில் ஏறி குதித்து, 3 அதிகாரிகள் உள்ளே சென்றனர். அவர்கள் கதவை திறந்ததைத் தொடர்ந்து, மற்ற அதிகாரிகளும் உள்ளே சென்றனர். வீட்டின் பின்புற வாயிலில் ஒரு குழு கண்காணிப்பில் ஈடுபட்டது.
  இதனிடையே, ப.சிதம்பரம் வீட்டுக்கு அருகே திரண்ட காங்கிரஸார், மத்திய அரசையும் சிபிஐயையும் எதிர்த்து கோஷமிட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

  இந்த பரபரப்பான சூழலில், ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி, அவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோர முடிவு செய்துள்ளது.

  முன்னதாக, ப.சிதம்பரம் வெளிநாடு தப்பி விடாமல் இருப்பதற்காக, அவரை தேடப்படும் நபராக அறிவித்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக நோட்டீஸ் வெளியிட்டிருந்தன.

  வழக்கு விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
  இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

  விரிவடையும் விசாரணை
  ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் ஆகிய இரு வழக்குகளையும் தாண்டி, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான தங்களது விசாரணையை அமலாக்கத் துறை விரிவுபடுத்தியுள்ளது.
  இதுதொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 
  ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில், மேலும் சில ஒப்பந்தங்களுக்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் முறைகேடாக ஒப்புதல் அளித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகளின் மூலம் கிடைக்கப் பெற்ற லஞ்சத் தொகையை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள போலி நிறுவனங்கள் வாயிலாக சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தன.

  விசாரணை அமைப்புகள் சட்டத்தை மதிக்க வேண்டும்
  தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் புதன்கிழமை இரவு செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:


  விசாரணை அமைப்புகள், சட்டத்தை மதித்துச் செயல்பட வேண்டும். எனது மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளது. அதுவரை, விசாரணை அமைப்புகள் காத்திருக்க வேண்டும்.
  நான் சட்டத்திடமிருந்து ஓடி ஒளிவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு வியப்பளிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவில், எனது ஜாமீன் மனுவுக்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் வழக்குரைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டிருந்தேன். விசாரணை அமைப்புகள், சட்டத்தை பாரபட்சத்துடன் கையாண்ட போதிலும், நான் சட்டத்தை மதிக்கிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ குற்றமிழைத்ததாக விசாரணை அமைப்புகள் எங்கும் குறிப்பிடவில்லை என்றார் ப.சிதம்பரம்.  
  பின்னர், அவரிடம் கேள்வியெழுப்ப செய்தியாளர்கள் முயன்றனர். எனினும், அவர் வேறு எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

  மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை
  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, எம்.சந்தனகௌடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.
  அப்போது, மனுவை அவசரமாக விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்புமாறு உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  பின்னர், என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பிற்பகலில் கூடியபோது, ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், விவேக் தங்கா, இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி, அவசர விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளரிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர். மேலும், ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
  அப்போது, உங்களது மனுவில் சில குறைபாடுகள் உள்ளதாக பதிவாளர் கூறியுள்ளார் என்று நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். அதற்கு, அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று கபில் சிபல் பதிலளித்தார். இதையடுத்து, பதிவாளரைத் தொடர்புகொண்டு, நீதிபதிகள் பேசினர். அப்போது, மனுவில் இருந்த குறைபாடுகள் தற்போதுதான் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்த மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்தார்.

  கோரிக்கையை ஏற்க மறுப்பு: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல்சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இடம்பெற்றிருப்பதால், இந்த விவகாரம் புதன்கிழமையே விசாரிக்கப்பட முடியாத நிலை உள்ளது என்று குறிப்பிட்ட கபில் சிபல், மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைத்தார். 
  அதற்கு, பட்டியலிடப்படாத வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது. இதுதொடர்பாக பதிவாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கபில் சிபல் கூறுகையில், எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன் என்ற உறுதிமொழியை அளிக்க ப.சிதம்பரம் தயாராக இருப்பதாகவும், கைது நடவடிக்கையிலிருந்து அவருக்கு இடைக்காலப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
  முன்னதாக, சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தின் சட்ட ரீதியிலான எந்த நகர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முழு அளவில் தயாராக உள்ளோம் என்று கூறினார்.
  இந்தச் சூழலில், ப.சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை, தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை பட்டியலிட்டுள்ளதாக உச்சநீதிமன்றப் பதிவாளர் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai