ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்திடம் சிபிஐ வைத்த 7 முக்கியக் கேள்விகள்!

மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் (73) நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்திடம் சிபிஐ வைத்த 7 முக்கியக் கேள்விகள்!


மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் (73) நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அவரைக் கைது செய்து தங்கள் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். 

தில்லி உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது முதல், நேற்று இரவு சிதம்பரம் கைது செய்யப்படும் வரை நீடித்த பரபரப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

நேற்று இரவு அவரது வீட்டின் சுவரை ஏறி குதித்து, சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், சிபிஐ அலுவலகத்துக்கு சிதம்பரத்தைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்துக்கு இரவு உணவை வழங்கினார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள சிதம்பரம் மறுத்துவிட்டார்.

பிறகுதான், சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தங்களது ஏவுகணைக் கேள்விகளை ஆரம்பித்தனர்.

முதற்கட்டமாக சில அடிப்படையான விஷயங்களை சிதம்பரத்திடம் கேட்டறிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் அவரிடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளை அதிகாரிகள் அடுக்கினார்கள்.

விசாரணையின் போது சிபிஐயின் மூத்த அதிகாரிகளுடன், சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லாவும் உடன் இருந்தார். சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு சந்தேகமாக இருக்கிறது, தெரியவில்லை, பதில் சொல்ல முடியாது என்ற பதில்களே சிதம்பரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதில் சில முக்கியக் கேள்விகள்..
1. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கம் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?

2. ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் இந்திராணி முகர்ஜியுடன் உங்களை சந்திக்க வந்தாரா அல்லது இந்திராணி முகர்ஜியிடம் இருந்து பணத்தை பெறுவதில் பத்திரிகையாளர் யாராவது உதவினார்களா?

3. மகன் கார்த்தியின் கட்டுப்பாட்டில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது?

4. வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட பிறகும் கூட, நீங்கள் ஏன் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை?

5. உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் சொந்தமாக இருக்கும் ஷெல் நிறுவனங்கள் எத்தனை?

6. யுகே, ஸ்பெயின், மலேசியா போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது?

7. பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது, அது எங்கிருந்து வந்த பணம்?

போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

பிறகு அடுத்தச் சுற்று விசாரணை காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த முக்கியக் கேள்விகளுடன் பல துணைக் கேள்விகளும் சிதம்பரத்திடம் எழுப்பப்பட்டது. விசாரணை முடிந்து இன்று பிற்பகலில் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com