ஒன்றரை மாதங்களில் பாஜகவில் 3.78 கோடி புதிய உறுப்பினர்கள்!

பாஜகவில் புதிய உறுப்பினர்களாக ஒன்றரை மாதங்களில் 3.78 கோடி பேர் இணைந்துள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 1.6 கோடி அதிகமாகும்.
ஒன்றரை மாதங்களில் பாஜகவில் 3.78 கோடி புதிய உறுப்பினர்கள்!


பாஜகவில் புதிய உறுப்பினர்களாக ஒன்றரை மாதங்களில் 3.78 கோடி பேர் இணைந்துள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 1.6 கோடி அதிகமாகும்.
பாஜகவில் நாடு முழுவதும் 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜன சங்கத்தைத் தொடங்கிய ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நாடு முழுவதும் கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடியும், தெலங்கானா மாநிலத்தில் அமித் ஷாவும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தனர். 2.2 கோடி புதிய உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் இலக்கு நிர்ணயித்திருந்தனர். இந்நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இது தொடர்பாக, கட்சியின் துணைத் தலைவரும், உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருமான துஷ்யந்த் குமார் கெளதம் தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
உறுப்பினர் சேர்க்கை முகாம் வெற்றிகரமாக அமைந்தது. 3.78 கோடி பேர் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 65 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 36 லட்சம் பேரும், குஜராத்தில் 34 லட்சம் பேரும், தில்லியில் 15 லட்சம் பேரும் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பணிகள் காரணமாகவே அதிகப்படியான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 

நாடு முழுவதும் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்களிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை, 5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் துஷ்யந்த் குமார்.
இதையடுத்து, பாஜகவின் உள்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பரிலும், கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் வரும் டிசம்பரிலும் நடைபெற வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில் உள்கட்சித் தேர்தல்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் உள்கட்சித் தேர்தலை நடத்த பாஜக தயாராகி வருவதாக அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் எஸ். வரிந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜம்முவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாஜக உள்கட்சித் தேர்தலுக்கான பணிகளை வியாழக்கிழமை தொடங்க உள்ளோம். ஜம்மு-காஷ்மீரிலுள்ள 10,600 வாக்குச் சாவடிகளுக்கான தலைவர்கள், 230 மண்டலங்களுக்கான தலைவர்கள், 29 மாவட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் 4 மாதங்களில் நிறைவடையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com