காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தானின் இருதரப்பு பிரச்னை: பிரான்ஸ், வங்கதேசம் கருத்து

ஜம்மு-காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்று பிரான்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்று பிரான்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா அண்மையில் ரத்து செய்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில்  செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம்; இதற்கு சம்பந்தப்பட்ட இருநாடுகளுமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஜான்சன் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் இன்னொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸும், ஜம்மு-காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் எனக் கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியன் வெஸ் லீ ட்ரியனை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை குறித்துப் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம்; இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசமும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் எனத் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்அண்மையில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்தது இந்தியாவின் உள் விவகாரம். பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com