ப.சிதம்பரம் விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக மத்திய அரசு விசாரணை அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்
ப.சிதம்பரம் விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு


முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக மத்திய அரசு விசாரணை அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டது. இதையடுத்து, இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. அதன் பின், முன்ஜாமீன் கோரி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்நிலையில், சிதம்பரத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராகுல் காந்தி, சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், சிதம்பரத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக மோடி அரசு, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் முதுகெலும்பற்ற ஊடகங்கள் சிலவற்றையும் பயன்படுத்துகிறது. அவமானகரமான இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் தகுதி வாய்ந்த, மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினரான சிதம்பரம் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இந்த நாட்டுக்கு விசுவாசத்துடன் சேவையாற்றியுள்ளார். அவர் தயக்கமே இல்லாமல் உண்மையைப் பேசுவதோடு இந்த அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியும் வருகிறார். ஆனால் கோழைகளுக்கு உண்மை என்பது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் வெட்ககரமான முறையில் சிதம்பரத்தைப் பழிவாங்க முயற்சிக்கின்றனர். நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதோடு, எந்த விளைவு ஏற்பட்டாலும் அது பற்றிக் கவகவலையின்றி உண்மைக்காகப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருப்பதாவது:
எங்கள் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும் இருக்கிறோம். உண்மையைப் பேசுவதற்காக தனது குடிமக்களைத் துன்புறுத்தும் அரசானது தனது கோழைத்தனத்தையே பிரதிபலிக்கிறது. சிதம்பரம் அதீத தகுதிகளையுடைய மதிப்புமிக்க தலைவர். அவர் இந்த நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடனும், தன்னடக்கத்துடனும் சேவையாற்றியவர். அவருக்கு நாங்கள் துணைநிற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி கருத்து கூறியுள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பாஜக போலீஸ் ராஜ்யத்தை நடத்துகிறது. மோடி அரசின் மிக மோசமான பழிவாங்குதல் நடவடிக்கையை இந்தியா தற்போது காண்கிறது. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி 7 மாதங்களாக தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்தார். தற்போது அவர் ஓய்வு பெறுவதற்கு 72 மணிநேரத்துக்கு முன் தீர்ப்பை வழங்கியுள்ளார். சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்த சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை அனுப்பப்படுகின்றன. மரியாதைக்குரிய முன்னாள் நிதியமைச்சர் இவ்விதம் வேட்டையாடப்படுகிறார். இந்தியா மூன்றாம் தர ஜனநாயக நாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த செய்தித் தொடர்பாளருமான சர்மா கருத்து கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு குறிவைத்துள்ளது. சிதம்பரத்துக்கு எதிரான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். மற்ற கட்சிகளில் இருந்த முகுல் ராய், ஹிமந்த பிஸ்வ சர்மா போன்றவர்கள் முறைகேடு வழக்கில் விசாரணையை சந்தித்து வந்தனர். அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு புலன்விசாரணை தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
இதே கருத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான ஆர்.பி.என்.சிங், மற்ற கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. எனினும் அவர்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டால் உடனடியாக விசாரணை நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.


காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு  பாஜக மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், தாம் செய்த தவறுகளுக்காக அவர் இப்போது தண்டனை அனுபவிக்கிறார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 
காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், மத்திய அரசுக்கு ஆதரவாக எந்த விசாரணை அமைப்பும் இயங்கவில்லை. அவர்கள் தன்னிச்சையாக இயங்குவதற்கான அதிகாரம் கொண்டவர்கள். ப.சிதம்பரம் தவறிழைத்திருந்தால், அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துதான் ஆகவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com