மௌனம் காக்கும் திமுக!: ப.சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 24 மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு தில்லியில் சிபிஐ கைது செய்துள்ளது.
மௌனம் காக்கும் திமுக!: ப.சிதம்பரம் கைது


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 24 மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு தில்லியில் சிபிஐ கைது செய்துள்ளது.
 இந்தக் கைது நடவடிக்கை தமிழக காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். 
இது பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைமை கடுமையாக கண்டித்துள்ளது. அதேவேளையில் கூட்டணியில் இருக்கும் திமுக மெளனம் காத்து வருகிறது. 

இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரத்தைக் கைது செய்ய தில்லியில் உள்ள அவர் வீட்டுக்கு சிபிஐ மூன்று முறை சென்று வந்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, சிதம்பரம் சட்ட நிபுணர். அதை சட்டரீதியாக சந்திப்பார் என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார்.
அதைப்போல துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோதும், அவர் சட்ட நிபுணர். 

சட்டரீதியாக சந்திப்பார் என்று கூறினார். இந்தப் பதில்கள், ப.சிதம்பரம் சிக்கிக் கொள்வதை மறைமுகமாக திமுக கொண்டாடுகிறதோ என்ற சந்தேகம் காங்கிரஸார் மத்தியிலேயே எழுந்துள்ளது.

மேலும், எந்தப் பிரச்னைக்கும் உடனுக்குடன் கருத்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு எந்த எதிர்வினையும் இதுவரை ஆற்றவில்லை. 

 திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதிக்கும், ப.சிதம்பரத்துக்கும் எப்போதுமே இரண்டாம் பொருத்தமே இருந்து வந்துள்ளது என்றாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-ஆவது ஆட்சிக் காலத்தில்தான் பெரும் பகை மூண்டது.  தமிழகத்தில் திமுகவை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றியதாக திமுக தலைமை அப்போது கருதியது. 

அந்த நேரத்தில்தான் அலைக்கற்றை ஊழல் வழக்கில்  திமுக சிக்கிக் கொண்டு தவித்தது. இந்தியா முழுவதும்  திமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இது அனைத்துக்குமே ப.சிதம்பரம்தான் காரணம் என்று கருணாநிதி கருதினார்.  

மேலும், மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும் கருணாநிதி அதிக துன்பப்பட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் மூலம் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டு சிபிஐ நடவடிக்கைகளைக் கைவிடுமாறு கோரியபோது கட்சி வேறு, ஆட்சி வேறு என்று மட்டும் அவர் கூறினாராம்.

இதனால், கருணாநிதி மிகவும் துயரம் அடைந்து ப.சிதம்பரத்துடன் உறவே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தார். 

ப.சிதம்பரத்தின் மீது கருணாநிதி அதிருப்தியாக இருந்தார். அதே அதிருப்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் தலைமை நிர்வாகிகளுக்கும் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே திமுகவால் இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால்தான் என்னவோ ப.சிதம்பரத்தின் கைதை திமுக மறைமுகமாக ரசிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதை உறுதி செய்யும் வகையில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் இது பற்றி கூறுகையில்,   ஐஎன்எக்ஸ் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ப.சிதம்பரத்தின் பெயரே இல்லை. இந்த நிலையில் தீவிரவாதியைப் போல  வீட்டின் சுவர் ஏறி அவரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றபோது முதலில் ப.சிதம்பரம்தான் கண்டித்தார். ஆனால், ப.சிதம்பரம் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கிறபோது மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிக்காமல், சட்ட ரீதியாக சந்திப்பார் என்றுதான் சொல்லியுள்ளார். அவர் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், ப.சிதம்பரத்தின் மீதான நடவடிக்கையின் மூலம் திமுகவும் கொஞ்சம் மிரட்சியில்தான் உள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து புதுதில்லி ஜந்தர்மந்தரில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.

 இதில் 14 கட்சிகள் பங்கேற்க உள்ளன. தில்லி சென்று இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தலைமை தாங்கலாம் என்று மு.க. ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இந்த முடிவில் இருந்து வந்தார். ஆனால், ப.சிதம்பரத்தின் மீதான நடவடிக்கைக்குப் பிறகு திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த ஆர்ப்பாட்டத்தை டி.ஆர்.பாலு வழிநடத்துவார் என்றும் முடித்துக் கொண்டார்.

 இதற்கிடையில் திமுகவின் வழக்குரைஞர் சரவணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இல்லை என்று கூறியது தொடர்பாக சர்ச்சை எழுந்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது. 

அதைத் தொடர்ந்து அதற்கு திமுக சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏதேனும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவும் ப.சிதம்பரம் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மெளனம் காப்பதாகக் கூறப்படுகிறது. 

  இதற்கிடையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் வியாழக்கிழமை போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 
 இந்தப் போராட்டத்தில் திமுக பங்கேற்குமா என்பது சந்தேகமே!

சிதம்பரத்தை அவரது வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிஐ அதிகாரிகள்.
சிதம்பரத்தை அவரது வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிஐ அதிகாரிகள்.

ஐஎன்எக்ஸ் வழக்கின் தொடக்கம்...
தொழிலதிபர் பீட்டர் முகர்ஜிக்கும் அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ் மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டு மோரீஷஸில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் 300 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடு வந்துள்ளது. இந்தத் தொகை ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகம். 
ஜனவரி 2008ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையும் வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றன. இதனை வருமான வரித்துறை அமலாக்கத் துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு  அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராகமாறினார். 

தான் திறந்த அலுவலகத்திலேயே  விசாரணையை எதிர்கொள்கிறார்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது புதுதில்லி லோதி சாலையில் புதிதாக கட்டப்பட்ட சிபிஐ தலைமை அலுவலகத்தை அன்றைய உள்துறை அமைச்சராக  இருந்த ப.சிதம்பரம் 2011-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தில்லியில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டவுடன், அவர் திறந்துவைத்த சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் அங்குள்ள ரகசிய அறையில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டார்.

அவர் திறந்து வைத்த அலுவலகத்திலேயே, விசாரணையை எதிர்கொள்வது காங்கிரஸ் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன், அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட  சிபிஐ தலைமையகம் கட்டப்பட்டதிலும், பெரும் ஊழல் நடைபெற்றதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.என்.எக்ஸ். வழக்கு விசாரணைக்கு பின்னர், சிபிஐ இந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

வழக்கு கடந்துவந்த பாதை...


2017
மே: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ நிதிப் பரிவர்த்தனை முறைகேடு வழக்குப் பதிவு
ஜூன்: வழக்கில், கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு
அக்டோபர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, தனக்கும், தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம்

2018
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்குப் பதிவு செய்தது
பிப்ரவரி: வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ
மார்ச்: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

மே: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு
ஜூலை: நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்யமாலிருக்க முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜூலை: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் சிதம்பரத்தை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
அக்டோபர்: ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா, பிரிட்டன், ஸ்பெயினில் உள்ள ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

2019 
ஜனவரி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது 
ஜூலை: ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திரானி முகர்ஜி அப்ரூவர்-ஆனார் 
ஆகஸ்ட்: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக புது தில்லியின் ஜோர் பாக் பகுதியிலுள்ள வீட்டை அமலாக்கத் துறை முடக்கம் செய்திருந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து வெளியேற கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுறுத்தல் 
ஆகஸ்ட் 20: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த தில்லி உயர்நீதிமன்றம், தனது உத்தரவுக்கு 3 நாள்கள் தடை கோரிய ப.சிதம்பரம் தரப்பு கோரிக்கையையும் நிராகரித்தது.

காலை முதல்... கைது வரை...
காலை 10.30: ஐஎன்எக்ஸ் வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு.
10.40: மனு தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முடிவு செய்வார் என சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர் கபில் சிபலிடம் நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார். 
10.50: அயோத்தி வழக்கு விசாரணையை தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். சிதம்பரம் மனு தொடர்பாக விசாரணை இல்லை.
11.00: சிதம்பரத்தை தேடப்படும் நபராக குறிப்பிட்டு நோட்டீஸ் வெளியிட்டது அமலாக்கத் துறை.
12.00: சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்ற பதிவாளர் தகவல் பிற்பகல் 2.00: சிதம்பரத்தின் மனுவை அவசரமாக விசாரிக்க நீதிபதி ரமணாவிடம் கபில் சிபல் கோரிக்கை
2.25: மனுவில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதி விசாரணைக்கு மனு அனுப்பி வைப்பு
மாலை 5.00: சிதம்பரத்தின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிமன்ற பதிவாளர் தகவல்.
6.00: சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சிபிஐ நோட்டீஸ் வெளியீடு
இரவு 8.10: காங்கிரஸ் தலைமையிடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம்
8.20: தில்லி ஜோர் பாகில் உள்ள இல்லத்துக்கு சென்றார் சிதம்பரம்
8.30: காங்கிரஸ் தலைமையகத்துக்கு சிபிஐ வந்தது
9.00: சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் வருகை
10.00-க்கு மேல்: சிதம்பரம் கைது செய்யப்படுகிறார்.

சிபிஐ, அமலாக்கத் துறை இடையே போட்டி
ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக சிபிஐ-அமலாக்கத் துறை அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை தேடி வந்தனர். அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் தொடர்புடைய வழிகாட்டுதல்களை மீறியதாக சிதம்பரத்தை அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
வங்கி முறைகேடு வழக்கு ஒன்றில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல் புரிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. எனினும், அதற்கு அடுத்த நாள் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.
ஐஎன்எக்ஸ் வழக்கில், இரு அமைப்புகளும் விசாரித்து வருகின்ற போதிலும், முடிவில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனை...
ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி, அவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோர முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com