ராமர் பிறந்த இடம் புனிதமானது; வேறு யாரும் உரிமை கோர முடியாது: ராம் லல்லா தரப்பு

ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தி புனிதமானது; வேறு யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது என்று மூலவர் ராம் லல்லா தரப்பு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தார்.
ராமர் பிறந்த இடம் புனிதமானது; வேறு யாரும் உரிமை கோர முடியாது: ராம் லல்லா தரப்பு


ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தி புனிதமானது; வேறு யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது என்று மூலவர் ராம் லல்லா தரப்பு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தார்.

ராமஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரம், உச்சநீதிமன்றத்தில் தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
9ஆவது நாளாக புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, மூலவர் ராம் லல்லா தரப்பில் வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் இறுதிகட்ட வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:

ஒருவர் 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஓரிடத்தில் இருந்தால் அந்த இடத்தை உரிமை கொண்டாட முடியும் என்ற கோட்பாடு நிர்மோஹி அகாரா மற்றும் பிற முஸ்லிம் தரப்புகளுக்கு பொருந்தாது. ஏனென்றால், ராமர் பிறந்த இடத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து உரிமையுடன் வழிபட்டு வந்துள்ளனர். மேலும், மசூதியைக் கட்டிக் கொண்டதால் மட்டுமே ராமஜென்மபூமிக்கு யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது. ராமஜென்மபூமியில் ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வருவதே அங்கு கோயில் இருந்ததற்கு போதுமான ஆதாரமாகும். அதற்கு மற்றொரு தரப்பு உரிமை கொண்டாடுவது என்னைப் பொறுத்தவரை சட்டவிரோதமானதாகும். சன்னி வக்பு வாரியம் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதுக்கும் உரிமை கொண்டாடி வருகிறது.

அணை கட்டும்போது சில கோயில்கள் தண்ணீரில் மூழ்கப்போகும் பட்சத்தில் சிலையை வேறு இடத்தில் வைத்து கோயிலை பக்தர்கள் அமைத்துக் கொள்வார்கள். அயோத்தியில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. அதாவது, ராமர் பிறந்த இடமே அயோத்தி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இதனால், வேறு இடத்துக்கு மாற்றும் முடிவை எடுப்பது பக்தர்களுக்கு பின்னடைவாக அமைந்துவிடும் என்று வாதத்தை முன்வைத்தார் வைத்தியநாதன்.
அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ராமர் கோயில் இடிக்கப்பட்டது என்றும் அந்த இடத்தில் 12ஆம் நூற்றாண்டிலேயே ஹிந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வைத்தியநாதன் தெரிவித்திருந்தார்.
மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில் 14 கஸ்தூரி தூண்கள் இருந்ததற்கான புகைப்படங்கள் உள்ளன. அதில், கடவுள் உருவங்களும்,  தாமரையும், முதலை, ஆமை உருவங்களும் இருந்தன. இவை ஹிந்து மதத்துக்கு தொடர்புடையதாகும் என்றும் அவர் வாதம் முன்வைத்தார்.
உச்சநீதிமன்ற அமர்வில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com