ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகளை தில்லியில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 

புது தில்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல புதிய அறிவிப்புகளை தில்லியில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி குறைந்து பொருளாதார மந்தநிலை நிலவுவதாக கருத்துக்கள் நிலவிவரும் வேளையில், தில்லியில் வெள்ளியன்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்ககள் பின்வருமாறு:

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. எனவே இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் என்பது இல்லை.

இந்த சூழலின் காரணமாக  உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படலாம்..

இந்நிலையில் உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை  காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாகவே உள்ளது. இன்னும் கூறுவதானால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது.

வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை பொறுத்தமட்டில் வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து, வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வோம்..

கடந்த 2014ல் மத்திய அரசு நிதிச் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன் அடுத்தபடியாக ஜி.எஸ். டி வரிவிதிப்பு முறை இன்னும் எளிமையாக்கப்படும்.இதுதொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.

அடுத்ததாக கார்ப்பரேட் நிறுவனங்களின் CSR விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது ; சிவில் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டில் ஊழல் பொதுத்துறை வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கபப்டும்.

அதேபோல் வங்கிகளிலிருந்து கடன்பெற்றவர்கள் கடனைத் திரும்ப செலுத்திய 15 நாள்களுக்குள் கடன் வாங்கியவரின் ஆவணங்களை வங்கிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரே தவணையில் கடனை திரும்ப செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டு, குறு, சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் உதவ வேண்டும் என்பது முதன்மையாக அறிவுறுத்தப்படும். .

புதிதாக 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவங்க பலரிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த Angel Tax எனப்படும் முதலீட்டு வரி ரத்து செய்யப்படுகிறது.

சிறு,குறு நிறுவனங்களுக்கு திரும்ப செலுத்தாமல் நிலுவையில் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி தொகையும் 30 நாள்களுக்குள் திரும்ப செலுத்தப்படும், இனிவரும் காலங்களில் நிலுவை தொகை 60 நாள்களில் நிறுவனங்களுக்குத் திரும்ப செலுத்தப்படும்.

வாகன, வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தோடு இணைத்து EMI-களை குறைக்க வேண்டும்.

2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பி.எஸ்-4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் .

இனி வங்கிகளில் ஒருமுறைக்கு மேல் ஆதாரை கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com