ஆப்கன்: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் எடுக்க வேண்டும்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷியா, துருக்கி போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஆப்கன்: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் எடுக்க வேண்டும்


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா, ஈரான், ரஷியா, துருக்கி போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப்பிடம், ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தலைதூக்கி வருவது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:
ஆப்கானிஸ்தானுக்கு மிகவும் அருகில் இந்தியா உள்ளது. ஆனால் அவர்கள், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தான் அருகில்தான் உள்ளது. அவர்கள் சிறிய அளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுவும் மிகக் குறைந்த அளவில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது நியாயமில்லை. அமெரிக்கா 7,000 மைல்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
எனவே ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வர மேற்கண்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மேலும் 19 ஆண்டுகள் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் தங்க முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை. 
மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கத்தை 100 சதவீதம், எனது தலைமையிலான அமெரிக்க அரசு அழித்துவிட்டது. அந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவின் பிடியில் உள்ளனர். அந்த பயங்கரவாதிகளை அவர்கள் சார்ந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஐரோப்பிய நாடுகள் அழைத்துக் கொள்ளவில்லையெனில், அந்த நாடுகளில் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதை தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை. அந்த பயங்கரவாதிகளை குவாண்டனாமோ சிறையில் 50 ஆண்டுகள் சிறைவைத்து, அவர்களுக்கு செலவு செய்ய அமெரிக்காவுக்கு விருப்பமில்லை என்றார் டிரம்ப்.
நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்குப் பிறகு, அதற்கு காரணமான அல்காய்தா அமைப்பினர் மீதும், அல் காய்தா அமைப்புக்கு ஆதரவளித்த தலிபான்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதையடுத்து நடைபெற்ற போரில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. எனினும், அமெரிக்கப் படையினர் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து வருகின்றனர். அந்த வீரர்களை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து வீரர்களையும் அமெரிக்கா திரும்பப் பெறாது என்றும், தலிபான்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பர் என்றும் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com