இந்தியாவுடன் இனி பேச்சு இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் அமைதி நடவடிக்கைகளை ஏற்க மறுக்கும் இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இனி பேச்சு இல்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


பாகிஸ்தானின் அமைதி நடவடிக்கைகளை ஏற்க மறுக்கும் இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு இம்ரான் கான் பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொண்டு விட்டது. இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை.

இம்ரான் கவலை: அணு ஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளுக்கும் (இந்தியா-பாகிஸ்தான்) இடையே பதற்றமான சூழல் நிலுவுவதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரச்னையைப் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளுமோ என்று கவலை எனக்கு வந்துவிட்டது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்றார் இம்ரான் கான்.

ராணுவ தளபதியுடன் ஆலோசனை: ஜம்மு-காஷ்மீர் நிலவரம், பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் ஆகியவை குறித்து பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் இம்ரான் கான் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். பாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com