காஷ்மீர்: மத்தியஸ்தம் செய்ய ஏராளமான நாடுகள் ஆர்வம்: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஏராளமான நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன; இந்தியா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காஷ்மீர்: மத்தியஸ்தம் செய்ய ஏராளமான நாடுகள் ஆர்வம்: பாகிஸ்தான்


ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஏராளமான நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன; இந்தியா ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 5ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற முயற்சி எடுக்கலாம் என்ற அச்சத்தில் எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருகிறது. பதிலுக்கு இந்தியாவும் தனது எல்லையில் வீரர்களைக் குவித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் பேரழிவு நேரிடலாம் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராய் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். எனினும், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்றும், இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்றும் இந்தியா தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் ஏராளமான நாடுகள் மத்தியஸ்தம் செய்ய ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா அதை ஏற்றால் மட்டுமே அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியும்.
காஷ்மீரில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதை பாகிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது. காஷ்மீரில் இந்தியப் படையினர் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்து பற்றி கேட்கிறீர்கள். பாகிஸ்தான் பிரதமர் என்ன கருத்து தெரிவித்தாரோ, அதுதான் எனது கருத்தும்.
கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தை நிர்ணயித்த காலத்துக்குள் செயல்படுத்தி முடிக்க பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டம் எப்போது நடைபெற வேண்டும் என்று முடிவெடுக்கப்படவில்லை என்றார் ஃபைசல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com