சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்

சென்னை - சேலத்தை  இணைக்கும் ரூ. 10 ஆயிரம் கோடியிலான 8 வழிச்சாலை பசுமை வழித்தடத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை ஆணையம் வாதம்


சென்னை - சேலத்தை  இணைக்கும் ரூ. 10 ஆயிரம் கோடியிலான 8 வழிச்சாலை பசுமை வழித்தடத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதைக் கருத்தில் கொள்ளாமல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அத்துடன் 35 நில உரிமையாளர்களும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகௌடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் சுமார் 2 மணி பயண நேரம் குறையும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குதிரைக்கு முன் வண்டியைச் செலுத்துவதற்கு சமமாகும். அதேநேரத்தில், இந்தத் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்.

அப்போது எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முதலில் இந்தத் திட்டம் சென்னை - மதுரைக்கு இடையே செயல்படுத்தப்படுவதாக இருந்தது. பின்னர் சென்னை - சேலத்துக்கு மாற்றப்பட்டது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி, திட்டத்தின் இடம் மாற்றம் ஆகிய இரண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்துக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com