நேபாள வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாளியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும்
நேபாள வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு


நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாளியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்திய-நேபாள கூட்டு ஆணையத்தின் 5-ஆவது கூட்டம், நேபாளத் தலைநகர் காத்மாண்டில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதீப் ஞவாளியும் எஸ்.ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, நேபாள வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய-நேபாள கூட்டு ஆணையத்தின் 5-ஆவது கூட்டத்தில், வர்த்தகம், போக்குவரத்து, மின்சாரம், நீர்வளங்கள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக, இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலாவை மேம்படுத்த இருவரும் உறுதிபூண்டனர்.
2020-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நேபாளத்தின் திட்டம் குறித்து ஜெய்சங்கரிடம், பிரதீப் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், இரு நாடுகளுக்குமிடையே கடந்த 1950-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலியக் குழாய் திட்டம், 4 சாலைத் திட்டங்கள், நுவாகோட் மற்றும் கோர்க்கா மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் உள்ளிட்டவை சிறந்த முறையில் நடைபெற்று வருவது இக்கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டது.
மின்சார ரயில்பாதை அமைத்தல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல், விவசாயம் உள்ளிட்டவற்றில் இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்திகரமாக உள்ளதாக நேபாளத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com