மகாராஷ்டிரம், குஜராத் வெள்ள மீட்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட விமானப் படை

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் விமானப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.


மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் விமானப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 300 பேர் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம், காந்திநகரில் தென்மேற்கு விமானப்படை பிரிவு உள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் வெள்ள மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்ததால் அந்த மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணியில் விமானப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டனர். தெற்கு ராஜஸ்தான் முதல் கோவா வரை விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 
குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 300 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். புணே, மும்பை, வதோதரா, ஆமதாபாத், ஜாம்நகர் உள்ளிட்ட இடங்களில் விமானப் படையினர் முகாமிட்டிருந்தனர். மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதனால் வெள்ள பாதிப்புப் பகுதிகளை விரைவில் அடைய முடிந்தது. 77 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 23, 000 கிலோ உணவுப் பொட்டலங்களும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கப்பட்டன. ராணுவம், கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 200 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com