மோடியை அங்கீகரிக்காமல் அவரை எதிர்கொள்ள இயலாது: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

நரேந்திர மோடியின் ஆட்சி முற்றிலும் எதிர்மறையானது அல்ல; அவரது பணிகளை அங்கீகரிக்காமல், விமர்சிப்பதால் மட்டுமே எதிர்க்கட்சிகள் அவரை
மோடியை அங்கீகரிக்காமல் அவரை எதிர்கொள்ள இயலாது: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்


நரேந்திர மோடியின் ஆட்சி முற்றிலும் எதிர்மறையானது அல்ல; அவரது பணிகளை அங்கீகரிக்காமல், விமர்சிப்பதால் மட்டுமே எதிர்க்கட்சிகள் அவரை எதிர்கொள்ள இயலாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். 

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: 
நரேந்திர மோடி அரசின் பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் அவர் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே 30 சதவீத வாக்குகளுடன் அவர் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளார். 
மக்களுடன் தன்னை எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ளும் முறையில் நரேந்திர மோடி செயல்படுகிறார். இதற்கு முன்பு எவரும் செய்யாமல், தற்போது அவரால் மேற்கொள்ளப்பட்டு, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அவரது பணிகளை நாமும் அங்கீகரிக்க வேண்டும். இல்லையேல், நம்மால் அவரை எதிர்கொள்ள இயலாது. அதேபோல், எப்போதும் அவரை விமர்சிப்பதால் மட்டுமே அவரை எதிர்கொண்டுவிட முடியாது. 
அதற்காக மோடியை அனைவரும் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்று கூறவில்லை. அரசு நிர்வாகத்தில், குறிப்பாக நிதி நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்களில் அவரது தனித்தன்மையான நடவடிக்கைகளை அரசியல் வட்டாரங்கள் குறைந்தபட்சம் அங்கீகரிக்கவாவது வேண்டும். மோடி அரசின் அரசியல் நிர்வாகம் என்பது வேறானது. ஆனால், அவரது அரசின் நிதி நிர்வாகம் முற்றிலும் மோசமானது அல்ல. 

மோடியின் நிர்வாக முறையில் உருவாக்கப்பட்டுள்ள சமூக உறவுகள் முற்றிலும் வித்தியாசமானவை. இதற்கு உதாரணமாக, வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மோடிக்கு எத்தகைய அளவு வெற்றியைத் தந்தது என்று குறிப்பிடலாம். 
அரசியல் வட்டாரத்தில் இருக்கும் நாம் அனைவரும் அவரது 2-3 திட்டங்கள் குறித்து நகைத்து வந்த நிலையில், இந்த சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் கோடிக்கணக்கான பெண்களிடையே மோடிக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்ததாக தேர்தல் காலகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனாலேயே 2014-இல் இல்லாத வகையிலான வெற்றியை, 2019-இல் அவர் பெற்றுள்ளார். 
எனவே, அவரது திட்டங்கள் எல்லாம் மாயை போன்றவை, தவறானவை என்று நாம் கூறிக்கொண்டிருந்தால், மோடியை எதிர்கொள்ள இயலாது. தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தோம். விவசாயிகள் பிரச்னையில் இருப்பதை மக்கள் உணர்ந்திருந்தாலும், அதற்கு அவர்கள் மோடியை பொறுப்பாளியாகப் பார்க்கவில்லை. அதன் பலனை நாம் தேர்தல் முடிவுகளில் கண்டோம். மோடிக்கு எது இத்தகைய மதிப்பளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com