மேற்கு வங்கத்தில் இடதுசாரியுடன் கூட்டணி: சோனியா காந்தி ஒப்புதல் என தகவல்

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் காலியாகவுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு தேசியத் தலைவர் இல்லாத காரணத்தினால், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைமை இடதுசாரியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமென் மித்ராவுடன் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பேசிய மித்ரா, "வரவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரி முன்னணியுடனான கூட்டணி குறித்து சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. இடதுசாரி முன்னணி ஒப்புக்கொண்டால் இரண்டு கட்சிகளும் அங்கு கூட்டணி அமைக்கலாம் என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்" என்றார். 

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், 

"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே களமிறங்க வேண்டும். அதனால், பாஜகவை எதிர்ப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் இணைய முடியாது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் நல்லுறவில் இருந்தாலும், சோனியா காந்தி கூட்டணி வைப்பதற்கு இடதுசாரி முன்னணியைத் தேர்வு செய்திருப்பதன் மூலம் இது தெளிவாக தெரிகிறது" என்றார். 

3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளே மொத்தமுள்ள 42 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்றன. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com