உ.பி.: பல் மருத்துவர் மீது முத்தலாக் வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் தனது மனைவிக்கு உடனடியாக முத்தலாக் கூறிய விவகாரம் தொடர்பாக பல் மருத்துவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் தனது மனைவிக்கு உடனடியாக முத்தலாக் கூறிய விவகாரம் தொடர்பாக பல் மருத்துவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைச் சட்டவிரோதமாக்கும் நோக்கில், முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இந்நிலையில், முசாஃபர்நகர் பகுதியிலுள்ள முஸ்தாஃபாத் கிராமத்தில் பல் மருத்துவராகப் பணியாற்றி வரும் தஹீர் ஹாசன் என்பவர் தனது மனைவி சாயீரா பானுவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாண்டி காவல் நிலையத்தில் தஹீர் ஹாசன் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமணத்தின்போது வாக்களித்திருந்த வரதட்சிணையை சாயீரா பானு குடும்பத்தினர் அளிக்காததையடுத்து, தஹீர் ஹாசன் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகக் காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் மற்றொரு வழக்கு: உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தது தொடர்பாக, மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் முகமது ஜாபர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அவரது மனைவி பாலாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எங்களிருவருக்கும் பிரச்னை எழுந்தது. இதனால், எனது பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு என் கணவரும் அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தி, சித்திரவதை செய்தனர். 
கடந்த 21-ஆம் தேதி பாலாபூர் காவல் நிலையத்தில் எங்களிருவரிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் சமாதானம் அடையாத என் கணவர், என்னிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முகமது ஜாபர் மீதும், அவரது குடும்பத்தினர் 4 பேர் மீதும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com